×

வனவிலங்கு – மனித மோதல் பிரச்னை தீர்க்கப்படாததால் கேரளாவில் 30 தொகுதிகளில் கதிகலங்கி நிற்கும் அரசியல் கட்சிகள்: விவசாய சங்கங்களின் திடீர் முடிவால் பரபரப்பு

 

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வனவிலங்கு பிரச்னை எதிரொலியாக 30 தொகுதிகளில் விவசாயிகள் போட்டியிட முடிவு செய்துள்ளதால் அரசியல் கட்சிகள் கதிகலங்கி உள்ளன. கேரளாவில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், வனவிலங்கு தாக்குதல் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக காஞ்சங்காடு, மானந்தவாடி, இடுக்கி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 30 மலைக்கிராமத் தொகுதிகளில் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள கேரள சுதந்திர விவசாயிகள் சங்கம், இந்த 30 தொகுதிகளிலும் நேரடியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

தற்போது இந்த 30 இடங்களில் ஆளும் இடதுசாரி முன்னணி 20 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 தொகுதிகளையும் வசம் வைத்துள்ளன. ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இந்த 30 இடங்களில் குறைந்தது 23 இடங்களை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், விவசாயிகளின் இந்தப் புதிய அறிவிப்பு பெரிய அரசியல் மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக விவசாயிகள் சங்கம் தனது 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தீவிரப் பிரசாரம் செய்து வருகிறது.

தற்காப்புக்காகத் தாக்கும் வனவிலங்குகளைக் கொல்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்க வேண்டும், வனப் பகுதிகளில் விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும், விளைநிலங்களில் விலங்குகள் புகாமல் தடுக்க வேலிகள் அமைக்க வேண்டும் மற்றும் பயிர் இழப்புகளுக்கு இரட்டிப்பு இழப்பீடு வழங்க வேண்டும் போன்றவை இவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

ஆளும் அரசு வனவிலங்குகளைக் கொல்ல அனுமதிக்கும் புதிய சட்டத் திருத்தத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தாலும், அதில் இன்னும் தெளிவான முடிவுகள் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கருதுகின்றனர். ‘பெரிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையைப் பொறுத்து மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்’ என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் இந்த அதிரடி முடிவால் இரு முக்கியக் கூட்டணிகளும் தங்களது வாக்குகள் சிதறுமோ என்ற அச்சத்தில் உள்ளன.

மணிசங்கர் அய்யர் பேச்சால் காங்கிரசில் பூகம்பம்
கடந்த 15ம் தேதி கேரள மாநில திட்டக்குழு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘கேரளாவில் பினராயி விஜயன் 3வது முறையாக மீண்டும் முதல்வராவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில் செயல்படும் ஒரே மாநிலம் கேரளா. பஞ்சாயத்து ராஜ் திட்டத்தில் இந்த மாநிலம் முன்னோடியாகத் திகழ்கிறது.

அதிகாரப் பரவல் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பாக காங்கிரஸ் கைவிட்ட பணிகளை பினராயி விஜயன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார். இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி புறக்கணித்திருந்த நிலையில், மணிசங்கர் அய்யர் மட்டும் பங்கேற்று ஆளுங்கட்சியைப் பாராட்டியது அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, ‘மணிசங்கர் அய்யர் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.

கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும் காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றார். வரும் சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி அரசை வீழ்த்த காங்கிரஸ் தீவிரமாகப் பிரசாரம் செய்து வரும் வேளையில், அக்கட்சியின் மூத்த தலைவரே பினராயி விஜயன் மீண்டும் வெற்றி பெறுவார் எனக் கூறியிருப்பது பெரும் அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED மகாராஷ்டிரா அரசியலில் புதிய...