கல்பாக்கம் அருகே இன்று வாலிபரை கத்தியால் வெட்டியதில் மீண்டும் கலவரம்: எஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு

 

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அடங்கிய புதுப்பட்டினம், உய்யாலிக்குப்பம் மீனவ கிராமங்களிடையே நீண்ட காலமாக நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இருதரப்பு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க, திருக்கழுக்குன்றம் தாசில்தார் மற்றும் போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பிரச்னைக்குரிய இடத்தை 2 மீனவ கிராம மக்களும் பயன்படுத்தக்கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டு, இருதரப்பு கிராம பிரதிநிதிகளும் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று திருவிழா நடத்துவதற்காக சம்பந்தப்பட்ட பிரச்னைக்குரிய இடத்துக்கு புதுப்பட்டினம் மீனவ கிராமத்தினர் செல்ல முயன்றனர். அதற்கு உய்யாலிக்குப்ப மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பதட்ட நிலையை தவிர்க்க, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக இருதரப்பு மீனவ பிரதிநிதிகளிடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, நேற்று மாலை இருதரப்பினரிடையே சிலர் அத்துமீறி, ஒருவர் மீது மற்றொருவர் சரமாரி கல்வீசி தாக்கி, அடிதடி மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி, இருதரப்பினரையும் கலைத்தனர். மேலும், புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிக்குப்பம் மீனவ கிராமங்களுக்கு இடையே மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க, நேற்றிரவு முதல் மாவட்ட எஸ்பி சிபின் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று காலை உய்யாலிக்குப்பத்தை சேர்ந்த கோகுல் (25) என்ற வாலிபர் கடைக்கு செல்ல, புதுப்பட்டினம் வழியே சென்றிருக்கிறார். அப்போது அவரை புதுப்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த சிலர் வழிமறித்து கத்தியால் சரமாரி வெட்டியுள்ளனர்.

இத்தாக்குதலில் கோகுல் என்பவரும், இதைத் தடுக்க வந்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் லோகேஷ் என்பவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் கலவர சூழல் நிலவி வருகிறது. அப்பகுதி வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும், அங்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

Related Stories: