ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. வழக்கம் போல இந்தாண்டும் 92 வயது மூதாட்டி முத்தம்மாள் நேற்றிரவு 12 மணியளவில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட தொடங்கினார். முதன்முதலில் கொதிக்கும் நெய்யில் கைவிட்டு தனது நெற்றி மற்றும் கைகளில் நெய்யை பூசி கொண்டார்.
இன்று அதிகாலை 5 மணிவரை அப்பம் சுட்டார். அப்போது பக்தி பாடல்களை பாடியபடி இருந்தார். கடந்த 53 ஆண்டாக முத்தம்மாள் அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக கடந்த ஒரு மாதமாக பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்து வந்துள்ளார். இன்று காலை மூதாட்டி சுட்ட அப்பங்களை வைத்து பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
