×

மன்னர் வீர சிவாஜி குறித்த சர்ச்சை பேச்சு; பாஜக-காங். தொண்டர்கள் பயங்கர மோதல்: புனேவில் போலீஸ், நிருபர்கள் மீதும் தாக்குதல்

 

 

புனே: மராட்டிய மன்னர் சிவாஜி குறித்த சர்ச்சைப் பேச்சால் மகாராஷ்டிராவில் இரு கட்சியினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கால் கடந்த சனிக்கிழமை மாலேகானில் நடந்த கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அப்போது திப்பு சுல்தானை மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், ‘சிவாஜியின் சுயராஜ்யம் என்ற கொள்கையைத் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக திப்பு சுல்தானும் பின்பற்றினார்’ எனக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிவாஜி மன்னரை அவமதித்து விட்டதாக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்ததுடன், ‘சப்கால் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக சப்கால் மீது போலீசார் ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று புனே நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியபோது இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்கிய இந்த வன்முறையில் காங்கிரஸ் தரப்பில் 3 பேர், பாஜக தரப்பில் 2 பேர், போலீசார் 2 பேர் மற்றும் செய்தியாளர்கள் 2 பேர் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர். தொண்டர்கள் சுவர்கள் மீது ஏறி கற்களை எறிந்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. வன்முறையைத் தூண்டியதாக இரு தரப்பு தொண்டர்கள் மீதும் போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பகுதியில் பதற்றம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags : King Veer Shivaji ,BJP ,Congress ,Pune ,Maratha king ,Shivaji ,Maharashtra ,president ,Harshvardhan Chapkal ,Malegaon ,
× RELATED ராஜஸ்தானில் சட்டவிரோதமாக செயல்பட்டு...