×

தூத்துக்குடி அருகே பயங்கரம்; வேன் மீது பைக் மோதியதில் 2 குழந்தை உள்பட 5 பேர் பலி

குளத்தூர்: குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வேன் மீது பைக் மோதியதில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே பல்லாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (40), லாரி டிரைவர். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர்.

தற்போது குருசாமி குடும்பத்தினர் குளத்தூர் வடக்கு காலனி சுந்தரலிங்கம் நகரில் வசித்து வந்தனர். மலர்விழி பிரிந்து சென்ற நிலையில், பிள்ளைகளை கவனித்து கொள்வதற்காக வேலைக்கு பண்டாரம்பட்டி மாரியப்பன் மனைவி முருகம்மாளை (39) நேற்று குருசாமி வரவழைத்து உள்ளார். முருகம்மாளைஅழைத்துக் கொண்டு பல்லாகுளத்தில் உள்ள உறவினர்களிடம் பேசுவதற்காக பைக்கில் குருசாமி, அண்ணன் குழந்தைகள் முகிலரசன்(5), சுமித்ரன்(3) மற்றும் அக்கா முத்துலட்சுமி(52) ஆகிய 5 பேர் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுள்ளார்.

கு.சுப்பிரமணியபுரம் விலக்கு – வைப்பாறு இடையே வந்தபோது, தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த பச்சைக்கிளி(55) ஓட்டி வந்த டூரிஸ்ட் வேன் திடீரென பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற 5 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரூ.3 லட்சம் நிதி: உயிரிழந்து உள்ள 5 பேரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அன்பு பயணம் கடைசியானது
குருசாமியின் அண்ணன் மனைவியும் முகிலரசன், சுமித்ரனின் தாயுமான தங்கமுனியம்மாளுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு 3வது ஆண் குழந்தை பிறந்துள்ளது. முகிலரசன், சுமித்ரனை அவர்களது உறவினர் ஜெர்ரி நேற்று காலை பல்லாகுளத்தில் இருந்து குளத்தூர் வடக்கு காலனி சுந்தரலிங்கம் நகருக்கு அழைத்து வந்துள்ளார். மாலையில் தானே கூட்டிப்போவதாக ஜெர்ரி கூறிய நிலையில், குருசாமி நான் கூட்டிச் செல்கிறேன் என்று கூறி, தனது பிள்ளைகளை ஜெர்ரியை அழைத்துவரச்சொல்லி விட்டு பைக்கில் அழைத்துச் சென்றபோதுதான் விபத்து ஏற்பட்டு 5 பேரும் பலியாகினர்.

வேன்-டூவீலர் மோதியதில் சிறுமி உட்பட 3 பேர் சாவு
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே கருமாத்தூரை சேர்ந்தவர் ராஜகுரு (27). கட்டிடத்தொழிலாளி. மனைவி கவுசல்யா (24). ராஜகுருவின் அண்ணன் ராஜ்குமார். இவர் ஒரு வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் உள்ளார். இவரது மனைவி விபத்தில் இறந்ததால், இவர்களது மகள் பிரமில்லா (7), சித்தப்பா ராஜகுரு வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சிறுமி பிரமில்லாக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரையும், பக்கத்து வீட்டை சேர்ந்த காசிநாதன் மனைவி சங்கீதாவையும் (29) டூவிலரில் ஏற்றிக்கொண்டு, ராஜகுரு கருமாத்தூர் அரசு மருத்துவமனைக்கு இரவு 10 மணியளவில் சென்றார். கோவிலாங்குளம் விலக்கில் சாலையை கடக்க முயன்றபோது மதுரையிலிருந்து தேனி சென்ற வேன், டூவீலர் மீது மோதியது. இதில் ராஜகுரு சம்பவ இடத்திலேயும், மற்ற இருவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தனர். இதுபற்றி செக்கானூரணி போலீசார் வழக்கு பதிந்து வேன் டிரைவர் குருவக்குடியை சேர்ந்த பாண்டியை (43) கைது செய்தனர்.

Tags : Tuticorin ,Kulathur ,East Coast Road ,Pallakulam ,Tuthukudi district ,
× RELATED பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும்...