கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூன்று மாத காலத்திற்கு 3000 ரூபாய் முன்பணம், மே மாதத்திற்கு கோடைகால சிறப்பு தொகையாக 2000 சேர்த்து 5 ஆயிரம் ரூபாய், ஒரு கோடியே 31 லட்சம் பேருக்கு வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.
இந்த உரிமைத்தொகை தேர்தல் காலத்தில் வழங்கக்கூடாது என்று சங்பரிவார் கும்பல் உச்சநீதிமன்றத்தை அணுகி இருக்கின்ற வேளையில், அவர்களின் சதியை முறியடிக்க கூடிய வகையில் முதல்வர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு நல்குவார்கள் என நம்பிக்கை உள்ளது.
எண்ணற்ற பல புதிய திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் திமுக தலைமையிலான இந்த அரசு அறிமுகப்படுத்தி அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தை வகிக்கிறது என்கிற அளவிற்கு, தமிழ்நாட்டை மேம்படுத்தியதில் நமது முதலமைச்சருக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது.
இந்த அரசுக்கு அறிவார்ந்த தளத்தில் உள்ள அனைவரும் வெகுவான பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். எனவே இந்த அரசு தொடர வேண்டும், தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு நல்குவார்கள் என்று பெரிதும் நம்புகிறோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் ஒரு தேர்தல் கூட்டணியாக கட்டுக்கோப்பாக 2017ல் இருந்து தொடர்ந்து இயங்கி வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணி கூட்டணியாகவே வடிவம் பெறவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை எதிர்ப்பதற்கு தகுதியான ஒரு கூட்டணி இன்னும் அமையவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. எனவே இந்த தேர்தலில் மீண்டும் தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கூட்டணிக்கு பேராதரவு நல்குவார்கள், நல்க வேண்டும்.
தற்போது திமுக தலைமையில் என்னென்ன கட்சிகள் மேலும் இணைய வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கக்கூடிய முழுமையான அதிகாரம் முதலமைச்சருக்கு தான். அவருக்கு நாங்கள் எந்த ஒரு அழுத்தத்தையும் கொடுக்க விரும்பவில்லை. அப்படி கொடுக்கவும் மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
