- நச்சுனு
- செங்கோட்டையன்
- அடி
- விஜய்
- எம்.ஜி.ஆர்
- அஇஅதிமுக
- முன்னாள்
- அமைச்சர்
- வைகை செல்வன்
- எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- நயினார் நாகேந்திரா
- என்டிஏ கூட்டணி
1. தனித்து ஆட்சி என்ற எடப்பாடி பழனிசாமியின் குரல் குறைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதே? தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனே, ‘ஆட்சியில் பாஜ பங்கு கேட்கவில்லை. என்டிஏ கூட்டணியில் அப்படி ஒர பிரச்னையே எழவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். கூட்டணியில் உள்ள தமாகா, அமமுக என எந்த கட்சியும் அப்படி சொல்லவில்லையே. அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும். தமிழக மக்களும் அதை தான் விரும்புகிறார்கள். கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்கவில்லை. ஏற்பதும் இல்லை.
2. எம்ஜிஆர் பாணியில் விஜய் கட்சி தொடங்கியிருப்பதால் தான் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் என்று சொல்கிறார்களே? எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கை என்பது வேறு, நடிகர் விஜய்யின் அரசியல் வாழ்க்கை என்பது வேறு. எம்ஜிஆர், அண்ணா தலைமையில் திமுகவில் இணைந்து அந்த கட்சியின் மிகப் பெரிய பொறுப்பான பொருளாளர் வரைக்கும் உயர்ந்தார்.
தான் முதல்வரானதற்கு யார் காரணம் என்று அண்ணாவிடம் கேட்டபோது, ‘என் தம்பி ராமச்சந்திரனின் செல்வாக்கும் ஒரு காரணம்’ என்று சொன்னார். எனவே, ‘அச்சம் என்பது மடைமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா’, ‘தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று நான் உனக்கு சொல்லட்டுமா இன்று’ என்று தொடங்கி தொடர்ந்து திரைப்படங்களில் அண்ணாவையும், அந்த இயக்கத்தையும் கொண்டு சென்ற அளப்பரிய பெருமை எம்ஜிஆருக்கு உண்டு.
எம்ஜிஆருக்கு என்று ஒரு அடித்தளம் இருந்தது, கொள்கை இருந்தது. திராவிட சித்தாந்தம் இருந்தது. அதுமாதிரி எதுவும் நடிகர் விஜய்க்கு இல்லை. திடீர்னு கட்சி தொடங்கியுள்ளார். மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும், இன்னும் காலம் மாறும். படிப்படியான வளர்ச்சி வரும் வரை அந்த கட்சியின் தொண்டர்களும், கட்சியும் தாக்கு பிடிக்க வேண்டும். எனவே எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது.
3. அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் ஊழல் செய்தாரா? இல்லையா?
அவர் ஊழல் செய்தாரா? இல்லையா? என்பதை நீதிமன்றம் தான் சொல்லியது. அவர் ஊழல் செய்தார் என்று திமுக அரசு தான் வழக்கு போட்டது. அந்த வழக்கில் தான் பாளையங்கோட்டை சிறையில் இருந்தார். வழக்கில் இருந்து அவர் வெளியில் வந்திருக்கலாம். ஆனால் ஊழல் குற்றம்சாட்டப்பட்டவர் செங்கோட்டையன். ஊழலை ஒழிக்க போகிறேன் என்று சொல்கிற விஜய், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான செங்கோட்டையனை வைத்துக் கொண்டு ஊழலை எவ்வாறு ஒழிக்க போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
4. என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்று பாஜ நெருக்கடி கொடுக்கிறதா? அப்படி எதுவும் சொல்லவில்லையே, தேசிய கட்சி பாஜ, தமிழகத்தில் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்குவோம் என்று தெளிவாக சொல்லிவிட்டார்கள். அதை தான் தமிழக மக்களும் விரும்புவார்கள். அதிமுக 7 முறை ஆட்சிக்கு வந்த கட்சி. இப்போதும் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தில் தான் இருக்கிறது.
எம்ஜிஆர் என்ற பெரிய சக்தி இருந்தது, அதற்கு பிறகு ஜெயலலிதா என்கிற சக்தி இருந்தது. இன்றைக்கு, ஒரு எளிய தொண்டரும் பொதுச் செயலாளராகி கட்சியை வழிநடத்தலாம் என்பதை இந்தியாவில் எந்த கட்சியிலும் இல்லாத ஒன்றை அதிமுக நிரூபித்துள்ளது. தொண்டர்களில் ஒருவர் பொதுச் செயலாளராகவோ, முதல்வராகவோ வரலாம் என்ற எடப்பாடி பழனிசாமியின் தேர்வு என்பது அடுத்து நாமும் வரலாம், வளரலாம் என்று ஒவ்வொரு தொண்டனுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டிய கட்சி அதிமுக தான்.
