×

நயா பைசா அவுக்க மாட்றாங்க… பிரசாரம் மட்டும் செய்யணுமா? தென்மாவட்ட இலை தொண்டர்கள் கொதிப்பு

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. திமுகவினர் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். ஆனால், அதிமுக-பாஜ கட்சி நிர்வாகிகள் இடையே இதுவரை ஒழுங்கான கூட்டணி இல்லை… இருவரும் வெவ்வேறு திசையில் பயணித்து வருகின்றனர். இதனால் அதிமுக தொண்டர்கள் பல இடங்களில் மிகுந்த சோர்வுடனேயே காணப்படுகின்றனர்.

அதிமுகவின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை பெரும்பாலும் செய்யாத நிலையில், புதிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறீர்கள் என மக்கள் கேட்டால் என்ன சொல்வது என்பதும் அதிமுக தொண்டர்களிடையே பெரும் சோர்வை தந்துள்ளது. இது ஒருபுறமிருக்க பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள், மாஜி அமைச்சர்கள் உள்ளிட்டோர் கட்சி கூட்டங்கள் உள்ளிட்ட எந்தவிதத்திலும் பணத்தை இன்னும் கீழே இறக்காமல் உள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் பணம் இல்லாமல் எந்த வேலையையும் செய்ய முடியாது என்ற நிலையில், பணத்தை செலவிட அதிமுகவினர் பெரும் தயக்கத்தில் உள்ளனர். இது அதிமுக தொண்டர்களை எதிர்பார்ப்பிலேயே வைத்துள்ளது. இதனால், கட்சி பணிகளும், தேர்தல் பணியும் பின்தங்கியே உள்ளது. ஏற்கனவே அதிமுகவினர் மிகுந்த சோர்வில் உள்ள நிலையில், கட்சி தலைமையோ அடுத்த வேலையை கொடுத்துள்ளது கட்சியினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுக்கு அதிமுக ஐடி விங் மூலம் மினி பிரிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக செல்ேபான் ஆப்பில் இணைத்து வீடு வீடாக சென்று அவர்கள் வாங்கும் மளிகை பொருட்கள், அதற்கான தற்போதைய விலை, பால், அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை குறித்து மக்களிடம் போய் பிரசாரம் செய்ய வேண்டுமென கூறியுள்ளனர். ஒவ்வொரு நிர்வாகியும் குறைந்தது 50 வீடுகளையாவது பார்த்து பிரசாரம் செய்ய வேண்டுமாம்.

கட்சியில் இருந்து பணம் எதுவும் கொடுக்காமல், வேலையை மட்டும் வாங்கினால், எப்படி மக்களிடம் போய் பிரசாரம் செய்ய முடியும்? பிரிண்ட் எடுக்கக் கூடிய பேப்பருக்கு கூட பணம் தராமல் நாங்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் எப்படி கட்சி பணியாற்ற முடியும் என புலம்பி வருகிறார்கள். இந்த புலம்பல் மதுரை, சிவகங்கை. ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் காண முடிகிறது.

* வாக்காளர்களுக்கு வீடு தேடி வரும் பரிசு மழை
கோவை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை நழுவ விடாமல் கைப்பற்ற அதிமுக-வினர் வியூகம் அமைத்து வருகின்றனர். குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மக்களை தன் பக்கம் இழுக்க பரிசு பொருட்களை அள்ளி வீசி வருகிறார். தொண்டாமுத்தூர் தொகுதியில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக எஸ்பி வேலுமணி உள்ளார்.

இந்த தொகுதியில் மொத்தம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பரிசு பொருட்கள் விநியோகம் தற்போது நடந்து வருகிறது. ஜெயலலிதா, இபிஎஸ் மற்றும் எஸ்பி வேலுமணி புகைப்படத்துடன் கூடிய பையில், தட்டு, குடை, ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

அதிமுக-வினர் ஆட்டோவில் கொண்டு சென்று வீடு, வீடாக கொடுத்து வருகின்றனர். இதற்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பரிசு மழையில் நனைந்து வருகின்றனர். இது தவிர தேர்தல் சமயத்தில் தொகுதி மக்களுக்கு இன்னும் சிறப்பு கவனிப்பு இருக்கும் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

Tags : Southern district ,Tamil Nadu ,DMK ,AIADMK ,BJP ,
× RELATED ஒன்லி நைட் மீட்டிங்; கொக்கி போடும் பாஜ...