×

தமிழ்நாட்டு வரலாற்றிலே இல்லாத அளவுக்கு அறநிலையத்துறையில் திமுக அரசு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது: பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டு வரலாற்றிலே இல்லாத அளவுக்கு அறநிலையத்துறையில் திமுக அரசு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது என்று பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நேற்று அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அறநிலையத்துறையில், நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கக்கூடிய எண்ணற்ற சாதனைகள் சிலவற்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 20 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 4 ஆயிரத்து 192 கோயில்களில், திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில், அரசு நிதி ரூ.425 கோடி- திருக்கோயில் நிதி-உபயதாரர் நிதி-பொதுநல நிதி என்று மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில், 352 திருக்கோயில்களை திருப்பணிக்கு எடுத்துக் கொண்டு இதுவரை 87 திருக்கோயில்களில் குடமுழுக்கு செய்து முடித்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, 12 ஆயிரத்து 931 திருக்கோயில்களில், 8 ஆயிரத்து ரூ.100 கோடி மதிப்பீட்டில் 29 ஆயிரத்து 479 திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில், 4 ஆயிரத்து 346 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 16 ஆயிரத்து 756 பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. மேலும், உபயதாரர் நிதி மூலமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 12 ஆயிரத்து 220 பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கோயில் சொத்துகளை மீட்க வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்து, அதிலும் சாதனை படைத்திருக்கிறோம்.

8 ஆயிரத்து 423 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஆயிரத்து 106 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோம். கிராமப்புற திருக்கோயில்கள்-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களுக்கான திருப்பணி, அந்த நிதி உதவித்தொகையை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, 10 ஆயிரம் திருக்கோயில்களுக்கு நிதியுதவி வழங்கியிருக்கிறோம்.

கோயில்களில், திருப்பணியோடு அறப்பணிகளையும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, 19 திருக்கோயில்களில் முதலுதவி மருத்துவமனைகளை அமைத்திருக்கிறோம். ஏழை-எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி-பட்டுப் புடவை-பட்டு வேஷ்டி உள்ளிட்ட 70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் திருக்கோயில்கள் சார்பாக, 2 ஆயிரத்து 800 திருமணங்களை நடத்தி வைத்து முடித்திருக்கிறோம்.

165 மாற்றுத்திறனாளி இணையர்களுக்கும் திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது. 2 திருக்கோயில்களில் செயல்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை இப்போது 12 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தியிருக்கிறோம். 764 திருக்கோயில்களில், ஒரு வேளை அன்னதான திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

திருக்கோயில்களின் தல வரலாறு-தல புராணம்-கட்டடக்கலை-கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டிருக்கிறோம். இப்போது நான் சொன்ன சாதனைகள் எல்லாம் குறைவு தான். பெரிய சாதனை புத்தகத்தின் சில பக்கங்கள் தான். ஏராளமான சாதனைகள் இருக்கிறது. கடந்த ஆண்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டை நடத்தி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK government ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,International Vallalar Conference 2026 ,Hindu Religious and Charitable Foundations Department ,
× RELATED நச்னு நாலு கேள்வி; செங்கோட்டையனை கூட...