×

சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்துக்கான சான்றிதழ்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் 13ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், சிறுபான்மையினர் அந்தஸ்து கோரி விண்ணப்பித்த கல்வி நிறுவனங்களில் 88 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்துக்கான சான்றிதழ்களை வழங்கினார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: 2007ம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டினை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றினை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் வழங்க 29.12.2022-அன்றும், கல்வி நிறுவனங்களுக்கு மதச்சார்பு சிறுபான்மையினர் நிரந்தர சான்றிதழ்வழங்க 2.2.2024 அன்றும் ஆணைகள் வெளியிடப்பட்டன.

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப் பின் வெளியிடப்பட்ட மேற்காணும் அரசாணைகளின்படி, இதுவரை 370 கல்வி நிறுவனங்களுக்கு இத்துறையின் மூலம் சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்களும், 56 மொழிவாரி சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்களும், 314 மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்துக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

தலைமைச் செயலாளர் தலைமையிலான கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் ஒன்பதாவது கூட்டத்தில், சிறுபான்மையினர் அந்தஸ்து கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, 88 கல்வி நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதில் 5 கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை அருண், துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் சரவணவேல்ராஜ், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆசியா மரியம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Backward Classes ,Most Backward Classes and Minorities Welfare Department ,
× RELATED நச்னு நாலு கேள்வி; செங்கோட்டையனை கூட...