- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமெரிக்கா
- ஆஸ்திரேலியா
- ராஜேந்திர சோழன்
- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
- சென்னை
- தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு
* 900 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் வழங்கப்பட்டது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை
சென்னை: தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தி ஏலம் விடப்பட்ட பல கோடி மதிப்புள்ள 5 சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எடுத்த நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து விரைவில் தமிழகத்திற்கு வர உள்ளது. தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்கள் மற்றும் கலை பொக்கிஷங்களை மீட்கவும், அந்த குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் பணியில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தலைமையிலான குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், வெளிநாடுகளில் உள்ள சிலைகளை எம்லாட் எனும் சட்ட நவடிக்கைகள் மூலம் மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து சம்பந்தப்பட்ட கோயில்களில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கிராமத்தில் அருள் மிக கைலாசநாதன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள திரிசூல மங்கள காளி(பத்தரகாளி) சிலை மற்றும் ரூ.4 கோடி மதிப்புள்ள தொன்மையான நந்தி கற்சிலை மாயமானது.
அதேபோல், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு நாகநாதசாமி கோயிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள 6 தலைகள் கொண்ட ஸ்கந்த – கார்த்திகேயன் சிலை மாயமாகியது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சிய இணையதளத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த சிலைகள் ஆஸ்திரேலியா நாட்டின் கேன்பரா நகரின் நேஷ்னல் கேலரி ஆப் ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந்தது.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தில் 900 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அருள்மிகு நாரீஸ்வரர் கோயிலில் அப்போதைய மன்னரான ராஜேந்திர சோழனால் வழங்கப்பட்ட நாயனார் மற்றும் சுந்தரர்- பறவை நாச்சியார் சிலை கடந்த 1972ம் ஆண்டு மாயமானதாக கொடுக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தஞ்சை மாவட்டம் மன்னார்குடி ஆலத்துர் கிராமத்தில் 12-13ம் நூற்றாண்டை சேர்ந்த அருள்மிகு விஸ்வநாதசாமி கோயிலில் சோமஸ்கந்தர் சிலை மாயமானது.
இந்த சிலைகள் குறித்து ஆய்வு செய்த போது, சிலைகள் அமெரிக்கா வாஷிங்டன் டிசி. ப்ரீர் சேக்லர் மியூசியம் என்ற இடத்தில் இருப்பது தெரியவந்தது. மேற்படி 5 சிலைகளை தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மற்றும் எஸ்பி சந்திரசேரகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திருடப்பட்ட சிலைகளின் உயரம், அகலம் உள்ளிட்ட சிலைகளுக்கான ஆதாரங்களை ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்பி அதை உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த 5 சிலைகளும் இந்தியாவுக்கு திரும்ப ஒப்படைக்க இந்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டனர். எனவே ஓரிரு நாட்களில் இந்த 5 சிலைகளும் தமிழகத்திற்கு கொண்டு வந்து, சம்பந்தப்பட்ட கோயிலில் ஒப்படைக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
