×

நாளை வெளியாக இருந்த நிலையில் திடீர் மாற்றம் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியீடு: தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவிருந்த நிலையில் திடீரென இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை(எஸ்ஐஆர்) மேற்கொண்டது.

சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தனர். இந்த நிலையில், நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் நாளை வெளியாக இருந்த இறுதி வாக்காளர் பட்டியல், வரும் 23ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

இந்திய உச்சநீதிமன்றத்தால் வழக்குகளில் 29.1.2026 அன்று வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையமானது, 30.1.2026 அன்று வெளியிட்ட கடிதத்தில், “முரண்பாடுகள்” என்ற பிரிவில் இடம் பெற்றுள்ள நபர்களின் பெயர் பட்டியலை கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் தாலுக்கா/ துணை பிரிவு அலுவலகங்கள், நகரப் பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

மேலும், இம்முரண்பாடுகள் பிரிவில் பாதிக்கப்படக்கூடிய நபர்கள், முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள், உரிய விளக்கத்துடன் தங்களது ஆவணங்களை, மறுப்புரைகளை நேரில் அல்லது தங்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி (வாக்குச்சாவடி முகவர்கள் உட்பட) மூலமாக சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.

இதற்கமைவாக, இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய நபர்கள் தங்களது ஆவணங்களை, மறுப்புரைகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது, 1.1.2026ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 23ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும். பட்டியல் வெளியான பின் தேர்தலுக்கான பணிகள் மேலும் வேகமெடுக்க தொடங்கும்.

Tags : Tamil ,Nadu ,Archana Patnaik ,Chennai ,Tamil Nadu ,Chief Electoral Officer ,
× RELATED பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும்...