×

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் விழிப்புணர்வு கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 33 பேரின் உடல் உறுப்புகள் தானம்

சென்னை: கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 33 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டுவது, ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் செல்வது, போக்குவரத்து சிக்னலை மீறுவது, சாலையின் எதிர்புறத்தில் வருவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் காரணமாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வரும் நபர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், சில நேரங்களில் உறுப்பு சேதம், மூளைச்சாவு மற்றும் உயிரிழப்பு ஏற்படும் சூழலும் உள்ளது. ஒவ்வொரு வருடமும் உடல் உறுப்புகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில், உடல் உறுப்பு தானம் வழங்கும் நபர்களுக்கு, அவர்களின் இறுதி சடங்கின் போது, அரசு மரியாதை செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானமாக செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த அரசாணை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுவரை உடல் உறுப்பு தானம் செய்த 639 பேருக்கு அரசு மரியாதைசெலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: உறுப்பு தானத்திற்கு ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. ஜனவரி 2026ம் ஆண்டு உறுப்பு தானம் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இம்மாதத்தில் மொத்தம் 33 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

இதில் 19 தானங்கள் (பாதிக்கும் மேல்) அரசு மருத்துவமனைகளில் இருந்து வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சென்னைக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளைச் சேர்ந்தவை. இது ஒரு மாதத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச தான எண்ணிக்கை. இந்த ஆண்டு பிப்ரவரி 12 வரை 43 நாட்களில் 42 உறுப்பு தானங்கள் நிகழ்ந்துள்ளன அதாவது தினமும் ஒரு தானம் என்ற விகிதத்தில் உள்ளது. மொத்தமாக 169 உடல் உறுப்பு தானமாக கிடைத்துள்ளது. இதில், 10 இதயம், 2 நுரையீரல், 23 கல்லீரல், 60 சிறுநீரகங்கள் அடங்கும். தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.

* உடல் உறுப்புகள் தானம் ஆண்டு தோறும் அதிகரிப்பு
ஆண்டு தானம் செய்யப்பட்ட உறுப்புகள்
2020 368
2021 378
2022 878
2023 935
2024 1446

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும்...