×

தேர்தல் பணிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழ்நாடு, மேற்குவங்கத்திற்கு சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்: தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை: தமிழகம் மற்றும் மேற்குவங்க மாநில தேர்தல் பணிகளை கண்காணிக்க சிறப்புப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தீவிரமாகக் கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக சிறப்புப் பார்வையாளர்களை நியமித்துள்ளது.

தமிழகத்திற்கான சிறப்புப் பார்வையாளராக ஓய்வுபெற்ற வருவாய்த் துறை அதிகாரி பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தமிழகத்தில் வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவில் உயர் பதவியில் பணியாற்றியவர். அதேபோல், மேற்குவங்க மாநிலத்திற்கு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி என்.கே. மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிக்கிம் மாநில டிஜிபி மற்றும் உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதையும், வரும் சட்டசபை தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் தயார் நிலைகளையும் இவர்கள் ஆய்வு செய்வார்கள்.

இதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஊதியமாக இரண்டு வாரங்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், கூடுதல் வாரங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இத்தகைய சிறப்புப் பார்வையாளர்களை ஆணையம் நியமித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவர்களின் வருகை தேர்தல் பணிகளை மேலும் முறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Tamil Nadu, West Bengal ,Chief Election Commission ,Chennai ,Election Commission ,Tamil Nadu ,West Bengal ,Assam ,Kerala ,Puducherry ,
× RELATED இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர்...