×

திருப்பரங்குன்றம் மலையில் 5 பேர் வழிபட அனுமதிக்காவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகேயுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி ராம.ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, ‘‘நீதிமன்றம் சொல்லும் 5 பேரை கோயில் மலை உச்சிக்கு சென்று பூஜை செய்து வழிபட அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து கலெக்டர் உரிய முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும்’’ என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘நீதிமன்றம் கூறுவது ஒரு புதிய பழக்க வழக்கமாக உள்ளது.

இதுகுறித்து யோசிக்க வேண்டியது உள்ளது. அறங்காவலர்கள் உடனடியாக முடிவு எடுக்க முடியாது. அவர்கள் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அறங்காவலர் ஆலோசனை தான் கூற முடியும். மத ரீதியான பழக்க வழக்கங்களில் அறங்காவலர்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. எனவே, நீதிமன்ற உத்தரவு குறித்து முடிவெடுக்க போதிய கால அவகாசம் வேண்டும்’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘புதிதாக தற்போது சென்று ஏற்றுவது என்பது ஏற்க முடியாதது. மனுதாரர்களில் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான, இரு நீதிபதிகள் அமர்வில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், சில பகுதிகளை மாற்ற வேண்டும் என சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.இதேபோல், போலீஸ் கமிஷனர், கலெக்டர் தரப்பில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி, ‘‘மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. அதை எனது தனிப்பட்ட உத்தரவாக நினைக்க வேண்டாம். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது தான் சரியாக இருக்கும்.

தற்போது தீபம் ஏற்ற வேண்டும் என நான் கூறவில்லை. அங்கு சென்று வழிபடுவதற்காக ஐந்து நபர்களை அனுமதிக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். அவ்வாறு அனுமதி அளித்தால் இந்த வழக்கை முடித்து வைக்கிறேன். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவில் அறங்காவலர்கள் பெயரை சேர்க்கவில்லை. வரும் 18ம் தேதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மலர் தூவி பூஜை நடத்த அனுமதி வழங்கப்படும் என்ற தகவலுடன் கோயில் நிர்வாகம் நீதிமன்றத்திற்கு வரவேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனில், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்’’ எனக் கூறிய நீதிபதி விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : Thiruparankundram Hill ,Judge ,G.R. Swaminathan ,Madurai ,Rama Ravikumar ,Karthigai ,Deepam ,
× RELATED கிண்டியில் தனியாரிடம் இருந்து...