திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில், ஐரோப்பா,அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா மோதல் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. திருப்பூரிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடல் பாதையை பயன்படுத்தும்.
ஆனால், தற்போதைய பதற்றமான சூழலால் அந்த பாதையில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சரக்கு கப்பல்கள் செங்கடல் பாதையை தவிர்த்து விட்டு, ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றி செல்லும் மாற்று பாதையை பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதனால், சரக்குகள் உரிய நேரத்திற்கு செல்லாமல் 20 முதல் 30 நாட்கள் கால தாமதமாவதோடு போக்குவரத்து செலவும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், கோடை கால ஆர்டர்கள் உரிய நேரத்தில் சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் கூறுகையில், ‘‘திருப்பூரிலிருந்து 80 சதவீதத்திற்கும் அதிகமான சரக்குகள் கப்பல் மூலமாகவே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த போர் காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் செல்லும் சரக்குகள் மாற்று பாதையில் செல்வதால் கால தாமதம் ஏற்படுகிறது. குறித்த நேரத்தில் சரக்குகளை ஒப்படைக்க முடியாததால், போக்குவரத்து செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. அதுமட்டுமன்றி சரக்குகள் உரிய நேரத்தில் சேராததால், அவற்றுக்கான விற்பனைத்தொகை ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப கிடைப்பதிலும் பெரும் தாமதம் ஏற்படுகிறது. இதனால், தொழில் துறையில் பணப்புழக்கம் குறைந்து, ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகமும் சரிவை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது. இது நாட்டின் அந்நியச் செலாவணி ஈட்டலையும் நேரடியாக பாதிக்கும். எனவே, போர் சூழல் தணிந்து மீண்டும் அமைதியான நிலை திரும்ப வேண்டும். அப்போதுதான் சரக்குகள் தடையின்றி சென்று சேரும்’’ என்றார்.
* முட்டை ஏற்றுமதி முடங்கியது விலையும் சரிந்தது
நாமக்கல் மண்டலத்தில் நேற்று முன்தினம் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மேலும் 30 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 460 காசில் இருந்து 430 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 20ம் தேதி, நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 520 காசாக இருந்தது. இந்த விலை படிப்படியாக குறைந்து, தற்போது 430 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருவதால், இந்தியாவில் இருந்து கப்பல்கள் இயக்கப்படவில்லை. இதனால், முட்டை ஏற்றுமதி கடந்த 3 நாட்களாக முற்றிலுமாக நிறத்தப்பட்டுவிட்டது. மேலும், கோடை காலம் துவங்கியுள்ளதால், நாடு முழுவதும் முட்டையின் விற்பனை குறைந்துள்ளது. இதனால் முட்டை விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் கூறியதாவது: துபாய், மஸ்கட், கத்தார், ஓமன், ஆப்பிரிக்கா நாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து தினமும் 80 லட்சம் முட்டைகள் வரை ஏற்றுமதியானது. தற்போது போர் நடந்து வருவதால், நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படவில்லை. முட்டை ஏற்றுமதி பாதிப்பால் தினமும் 80 லட்சம் முட்டைகள் உள்ளூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் முட்டை விற்பனை குறையும். கடந்தாண்டு மார்ச் மாதம் ஒரு முட்டையின் விலை 380 காசாக தான் இருந்தது. முட்டை ஏற்றுமதி பாதிப்பால், பண்ணைகளில் தேக்கம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
