×

தஞ்சை தவெக கூட்டத்தில் தடுப்புகளை தூக்கி எறிந்து தொண்டர்கள் அட்டகாசம் விஜய்யை பின்தொடர்ந்ததால் ஐசியூவில் கல்லூரி மாணவன்

* அடுத்தடுத்து விபத்துகளில் பலர் காயம்
* கீழே விழுந்தவர்களை மிதித்து கொண்டு ஓடியதால் பெண்கள் அலறல்
* போலீசுடன் கடும் வாக்குவாதம்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு கியூ.ஆர்.கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தவெக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் நேற்று காலை 9.30 மணியளவில் திருச்சி வந்தார். விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து வர வேண்டாம் என்று தவெக சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை தொண்டர்கள் மதிக்கவில்லை. விஜய் வாகனத்தை பின்தொடர்ந்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய் வாகனத்தை ஏராளமானோர் சூழ்ந்து கொண்டு பூக்களை தூவினர். விஜய்யை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் வாகனத்துடன் ஓடி வந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் தடுமாறி விழுந்தனர். இதனால் வாகனம் நகர முடியவில்லை. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதன்பின் விஜய் வாகனம் புறப்பட்டது. அந்த வாகனத்துக்கு முன்னும், பின்னும் ஏராளமானோர் டூவீலர்களில் பின் தொடர்ந்து சென்றனர். டூவீலரில் வந்தவர்களில் பெரும்பாலானவர்கள், தலைகவசம் அணியாமலும் ஒரு கையில் வாகனத்தை ஓட்டியும் ஆபத்தை உணராமல் வந்தனர். ஒவ்வொரு பைக்கிலும் 3 பேர், 4 பேர் அமர்ந்திருந்து ஆபத்தான முறையில் பயணித்தனர்.

வாகனத்தை பின்தொடர்ந்து வந்தபோது டூவீலரில் வந்தவர் நிலைதடுமாறி விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த கார் மோதியது. அடுத்தடுத்து வந்த வாகனங்களும் மோதின. துவாக்குடி அருகே விஜய்யின் கார் வரும் போது தொண்டர் ஒருவர் மாலை கொடுத்தார். அதை விஜய் வாங்கவில்லை. அதனால் அந்த மாலையை தொண்டர் விஜய் காரின் கண்ணாடியில் மாட்டி விட்டார். திருச்சியில் இருந்து விஜய்யை வாகனத்தை டூ வீலரில் பின்தொடர்ந்த சென்ற திருச்சி கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படிக்கும் திருச்சி கீழகல்கார்கண்டார்கோட்டை மகாலட்சுமி நகரை சேர்ந்த விக்னேஷ் (20) மற்றும் அவரது நண்பர் அருண் (19) ஆகியோர் விஜய்யை பார்த்த கொண்டே வந்ததால், சாலையோரம் நின்றிருந்த போலீஸ் வாகனம் மீது மோதி கீழே விழுந்தனர்.

இதனால், அடுத்தடுத்த வாகனங்கள் அவர்கள் மீது மோதியது. இதில் விக்னேசிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னால் அமர்ந்து வந்த அருணுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தலையில் பலத்த காயடைந்த விக்னேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூவில்) சேர்க்கப்பட்டுள்ளார்.
விஜய் நிகழ்ச்சியை முடித்து கொண்டு திருப்பி செல்லும் வழியில் பின் தொடர்ந்த தொண்டர்கள், அவ்வழியாக டூவீலரில் வந்த முதியவர் மீது மோதினர்.

இதில், காயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதே போல் தவெக மாநாட்டிற்கு வந்த விஜய்யின் வாகனத்தை துரத்தி கொண்டு வந்த இளைஞர்கள் பலர், சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் அருகே விஜய் வந்த போது சாலையோரம் சிலர் கார்களை நிறுத்தி காத்திருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் கார் ஒன்றின் மீது ஏறினார். இதைப்பார்த்த மற்ற ரசிகர்களும் அடுத்தடுத்து அந்த காரின் மீது ஏறி நடனமாட தொடங்கினர். இதனால் அந்த காரின் உரிமையாளர் அவர்களை கண்டபடி வசைபாடி அடித்து விரட்டினார்.

தஞ்சாவூர்- திருச்சி சாலையில் வந்த ஆம்புலன்ஸ்க்கு கூட வழி விடாமல், வாகனங்களை தவெகவினர் ரகளை செய்தனர். வேறு வழியின்றி போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தினர். ஹாரன்கள் அடித்தபடியே திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டி வரைக்கு சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். ஆபத்தான முறையில் வாகனத்தின் மீது ஏறி ரசிகர் செல்பி எடுத்தனர். டோல்கேட் பகுதியில் விஜய் வாகனத்தை விடாமல் சூழந்து கொண்ட ரசிகர்களை லத்தியை சுழற்றி போலீசார் கலைத்தனர்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தவெக தலைமை கூறி வருகிறது. ஆனால், ஒவ்வொரு கூட்டத்துக்கு அந்த பாஸை ரூ.5000க்கு நிர்வாகிகள் விற்பனை செய்து கூட்டத்தை அதிகளவுக்கு கூட்டம் வேண்டும் என்று ரகசிய உத்தரவை போட்டு வருகின்றனர். நேற்றும், கூட்டத்துக்கு பாஸ் இல்லாதவர்கள், ரூ.5000 கொடுத்து பாஸ் வாங்கியவர்கள் என ஏராளமானோர் வந்தனர்.

கூட்டத்தை கட்டுபடுத்த இருந்த போலீசார், அவர்களை தடுத்தனர். இதனால், அரங்கிற்குள் செல்ல வேண்டும் எனக்கூறி போலீசாரிடம் தவெகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தடுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு, புழுதி பறக்க ஓடினர். இன்னொரு பக்கம் தவெக நிர்வாகிகள் பாஸை செக் செய்து அனுப்பி கொண்டிருக்கும் போதும், அவர்களுடன் மோதலில் ஈடுபட்ட ரசிகர்கள் தடுப்புகளை தள்ளி விட்டு கூட்டம் நடக்கும் இடத்துக்கு சென்றனர். தடுப்புகளின் உட்பகுதியில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த ஆம்புலன்ஸ் வெளியே வருவதற்காக தடுப்பு திறக்கப்பட்டது. ஆனால், ஆம்புலன்சில் யாரும் இல்லை. அப்போது அங்கு கூட்ட அரங்குக்குள் நுழைவதற்கு தயாராக இருந்த தவெகவினர் ஆம்புலன்சை விடுங்கள் என கூறினர்.

ஆம்புலன்சுக்காக கேட்டை திறந்ததும், ஆம்புலன்சை வந்ததை பயன்படுத்திக் கொண்டு பெரும்பாலானவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி முண்டியடித்து கொண்டு அரங்கத்துக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் கூட்டம் நடந்த அரங்குக்கு வெளியே திரண்டிருந்த ஏராளமானோர் தடுப்புகளை உடைத்தும், அதை தாண்டி குதித்தும் திபுதிபுவென உள்ேள புகுந்தனர். இதில் சில தொண்டர்கள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது ஏறி மிதித்து கொண்டு பின்னால் வந்தவர்கள் ஓடினர். இதைப்பார்த்து பெண்கள் பலர் அலறிக்கொண்டு அரங்குக்குள் செல்லாமல் வெளியேறினர். ெசருப்புகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. கூட்டம் முடிந்தபின்பும் தடுப்புகளை தாண்டி தவெகவினர் அட்டகாசம் செய்தனர்.

* காலேஜ் போறேன்னு சொன்னான்… மாணவனின் தந்தை கண்ணீர்
ஐசியூவில் உள்ள விக்னேஷின் தந்ைத பாண்டியன் கூறுகையில், ‘‘பால் வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகன்கள் இரட்டையர்கள். இருவரும் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர். இருவரும் காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இதில் விக்‌னேஷ், அவரது டூ வீலரில் செல்லாமல் நண்பருடன் டூவீலரில் விஜய் மாநாட்டிற்கு சென்றுள்ளார். இது எனக்கு தெரியாது. ஆனால் விபத்து நடைபெற்ற பிறகு மதியம் 12 மணிக்கு எனக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்தேன். இப்போது என் மகன் ஆபத்தான நிலையில் உள்ளார். மருத்துவர்கள் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை. கல்லூரி நிர்வாகம் மாணவன் வெளியே செல்ல எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்பேன்,’’ என்றார்.

* சங்கீதா படத்தை காட்டிய தொண்டர் பிடுங்கிய புஸ்ஸி
நடிகை ஒருவருடன் திருமணம் தாண்டி உறவில் இருந்தார். என்னை கொடுமைப்படுத்தினார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால், சங்கீதா மீது தவெகவினர்கள் ஆபாசமாகவும், இழிவாகவும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு விஜய் எதுவும் சொல்லாததால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. மனைவியின் குற்றச்சாட்டுக்கு விஜய் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. தஞ்சாவூரில் நேற்று நடந்த கூட்டத்தில் விளக்கம் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் தனது மனைவி சங்கீதா பற்றி எதுவுமே பேசவில்லை. விஜய் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர், விஜய்யுடன் சங்கீதா இருக்கும் புகைப்படத்தை உயர்த்தி காட்டினார். இதைப்பார்த்து விஜய் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அங்கு வந்த புஸ்ஸி ஆனந்த் தொண்டரிடம் இருந்து சங்கீதா படத்தை பிடுங்கிச் சென்றார்.

* விதிமீறலையும் தவெகவையும் பிரிக்க முடியாது
விஜய்யின் உத்தரவையும் துளியளவு கூட தவெகவினர் மதிப்பது கிடையாது. இதனால் விஜய் எங்கு சென்றாலும், விபத்துகள், உயிரிழப்புகள் என்பது சகஜமாகி விட்டது. தஞ்சாவூரிலும் விபத்துக்கு பஞ்சமில்லை. விதிமீறலும்- தவெகவினரையும் பிரிக்க முடியாத என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தவெகவினர் அட்டகாசத்தை விஜய் கண்டு கொள்ளாத தான் என்று நெட்டிசன்கள், பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags : Vijay ,Thanjavur ,Thaveka ,Ayyasamypatti ,Chengipatti ,
× RELATED கிண்டியில் தனியாரிடம் இருந்து...