இந்த வார விசேஷங்கள்

14-2-2026 – சனி சனி பிரதோஷம்

ஒவ்வொரு பிரதோஷமும் உயர்வானது. சிவ வழிபாட்டுக்கு உரியது. பாற்கடலைக் கடைந்த போது வந்த ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமான், சனிக்கிழமை திரயோதசி திதியில் நந்தியின் கொம்புகளுக்கிடையே ஆனந்தத் தாண்டவம் ஆடினார் என்பது சனி பிரதோஷத்தின் பின்னணியாகும். திங்கட்கிழமை வருகின்ற பிரதோஷம் சோம பிரதோஷம் என்றும், சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் ( மகா பிரதோஷம்) என்றும் சிறப்பு பெற்றிருக்கிறது.சனி பிரதோஷம் என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த திரயோதசி திதி (மாலை 4:30 – 6:00 மணி) சனிக்கிழமையில் வருவதாகும். இந்த நாளில் விரதமிருந்து சிவாலயம் சென்று நந்தியை வழிபட, சனி தோஷம், பிறவிக் கடன்கள் நீங்கி, 120 வருட பிரதோஷ தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும். பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு பால், தயிர், தேன் கொண்டு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது சிறப்பு. நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்வது வழக்கம். சனி பகவானின் கெடுபலன்கள் குறையும் (சனி தோஷம், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி). மன அமைதி, குழந்தை பாக்கியம் மற்றும் தீராத நோய்கள் தீரும்.சனி பிரதோஷ நாளில் ஏழைகளுக்குத் தானம் செய்வது அதிக நற்பலன்களைத் தரும்.

15-2-2026 – ஞாயிறு மகா சிவராத்திரி

சிவ தத்துவத்தை தன்னுள் கொண்டாடுவது சிவராத்திரி எனப்படும். சிவா’ என்றால் ‘எது இல்லையோ, அது’ (முடிவிலி, பிரபஞ்சத்தின் பரம்பொருள்) என்று பொருள். இந்த இரவு, நாம் சிவம் என்பதை உணர்ந்து, தன்னுள் இருக்கும் சிவ தத்துவத்தைத் தரிசிக்கும் தியான நிலையாகும்.சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் இணைவை குறிக்கும் நாளாகும். சிவபெருமான் அடிமுடி காண முடியாத ஜோதி பிழம்பாக லிங்கோத்பவராக தோன்றிய நாள். இது சிவனின் முடிவில்லாத எல்லையற்ற தன்மையையும், உண்மையான வடிவத்தையும் குறிக்கிறது. சிவராத்திரி என்பது வெளியுலக விஷயங்களை விடுத்து, அகத்தை நோக்கி, சிவனை தன்னுள் தரிசித்து முக்தி அடையும் ஒரு மகத்தான ஆன்மிக பயணமாகும். இந்த இரவில் விழித்திருப்பது, நம் மனதில் உள்ள அறியாமை, தீய குணங்கள் மற்றும் அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி, ஞானம் என்னும் சிவத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது. இரவு முழுவதும் விழித் திருந்து, தியானம் மற்றும் சிவபூஜை செய்வதன் மூலம், மனக் கவலைகள் நீங்கி, முக்தி, உள்நிலை மாற்றம், மற்றும் ஆத்ம சக்தி, இறை உணர்வை அடையலாம்.

மகா சிவராத்திரி எதற்காகக் கொண்டாடுகிறோம் என்பதற்கு புராணங்களில் பல கதைகளும், காரணங்களும் சொல்லப்படுகிறது. அதாவது, சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட போது தேவர்களும் மற்றவர்களும் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபட்ட நாள் மகா சிவராத்திரி என்றும், சிவ பெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்த நாள் மகா சிவராத்திரி என்றும், சிவபெருமான் அக்னிலிங்கமாக வெளிப்பட்ட தினம் மகாசிவராத்திரி என்றும் புராணக் கதைகள் விவரிக்கின்றன.மகா சிவராத்திரி விரதத்தை எந்த நாளில் கடைபிடிக்க வேண்டும், எந்த நாளில் இரவு கண் விழித்து சிவ வழிபாடு செய்ய வேண்டும், எப்போது விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் பிப்ரவரி 15ம் தேதியன்று மாலை 5.51 மணிக்கு தான் சதுர்த்தசி திதி துவங்குகிறது. அதே போல் பிப்ரவரி 16ம் தேதியன்று மாலை 06.26 மணியுடன் சதுர்த்தசி திதி நிறைவடைந்து விடுகிறது. அதற்கு பிறகு அமாவாசை திதி துவங்கி விடுகிறது. மகா சிவராத்திரி வழிபாடு என்பது இரவு முழுவதும் கண் விழித்து செய்யப்பட வேண்டியது. சதுர்த்தசி திதி இருக்கும் நாளில் மாலை துவங்கி, இரவு முழுவதும் நான்கு காலங்களாக பிரித்து, சிவ வழிபாடு நடைபெறும். அதாவது, மகாசிவராத்திரி வழிபாடு துவங்கும் போதும், நிறைவு செய்யும் போது சதுர்த்தசி திதி இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் பிப்ரவரி 15ம் தேதி மாலை சதுர்த்தசி துவங்கி, பிப்ரவரி 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு முன்பாகவே சதுர்த்தசி திதி நிறைவடைந்து விடுகிறது. அதனால் பிப்ரவரி 15ம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு மகா சிவராத்திரி வழிபாட்டினை துவக்கி, அன்று இரவு முழுவதும் கண் விழித்து, நான்கு காலங்களில் நடைபெறும் சிவ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். பிப்ரவரி 16ம் தேதியன்று காலை 6.00 மணி அளவில் நான்காம் கால பூஜை நிறைவு செய்ய வேண்டும். ஆனால் பிப்ரவரி 16ம் தேதியன்று மாலை 06.26 மணிக்கே சதுர்த்தசி திதி நிறைவடைந்து விடுகிறது. அதனால் மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் பிப்ரவரி 15ம் தேதியன்று காலை முதல் விரதம் கடைபிடித்து, அன்று இரவு முழுவதும் கண் விழித்து, சிவ வழிபாடு செய்ய வேண்டும். பிப்ரவரி 16ம் தேதியன்று காலை முடிக்க வேண்டும்.

16-2-2026 – திங்கள் திருவோண விரதம்

திருவோண விரதம் என்பது மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தில், பெருமாளுக்கு (மகாலட்சுமியுடன்) மேற் கொள்ளப்படும் சிறப்பு விரதமாகும். திருவோண நாள் பல பெருமாள் கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பெரும்பாலான பெருமாள் ஆலயங்களில் அபிஷேக ஆரா தனைகள், சில கோயில்களில் பெருமாள் பிரகார புறப்பாடு என சிறப்பாக நடைபெறும். வாமன அவதாரம் நிகழ்ந்த இந்த நாளில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபடுவதால், சகல வளங்களும், திருப்பங்களும், மன மகிழ்ச்சியும் கிடைக்கும். திருவோணத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி, பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம் அல்லது வீட்டில் பெருமாள் படத்திற்குத் துளசி மாலை அணிவித்து, பழங்கள், பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் தொழில் விருத்தி, வீட்டில் அமைதி மற்றும் செல்வம் சேரும். ஒப்பிலியப்பன் கோயிலில் திருவோண தினத்தன்று சிரவண தீபம் ஏற்றிக்கொண்டு பிராகார வலம் வருவார்கள். இந்த தீபத்தைப் பார்த்துவிட்டுத்தான் விரதத்தை முடிப்பார்கள். நாம் மனதில் கோரிக்கையை வைத்து இந்த திருவோண விரதம் இருந்தால் அந்த கோரிக்கை கட்டாயம் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கை மக்களிடையே உண்டு.

17-2-2026 – செவ்வாய் அமாவாசை

இன்று முன்னோர்களுக்கான வழிபாட்டு நாள். அவரவர்கள், குடும்பத்தில் உள்ள முன்னோர்களை நினைத்து எள்ளும் நீரும் விட்டு. தர்ப்பணங்கள் செய்வது விசேஷம். இதன் மூலமாக முன்னோர்கள் ஆசி கிடைக்கும். இது தவிர மாசி மாத அமாவாசைக்கு மற்றும் ஒரு சிறப்பு உண்டு. அது அம்மன் கோயில்களில் குறிப்பாக அங்காள பர மேஸ்வரி கோயில்களில் நடைபெறும் மயான கொள்ளை உற்சவம்.அன்று அம்பாள் பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்டாள். இன்றும் எல்லா துஷ்ட சக்திகள் பேய், பிசாசுகளுக்கு அன்று அம்மன் உணவை சூரையிடுவது நடைபெறுகிறது. அந்த உணவை உண்டு அந்த துஷ்ட சக்திகள் அந்த இடத்தை விட்டு நீங்கி விடுவதாக ஐதீகம். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வீதியுலா வரும் அம்மன் மீது சில்லரை காசுகள், நெல் போன்றவை வாரி இறைத்து தரிசனம் செய்வர் .பெரம்பலூர் அருகே குரும்பலூர் பாளையம் கிராமத்தில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான சூரை திருவிழா, ராணிப் பேட்டையிலுள்ள அங்காளம்மன் கோயில்களில் மாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறும் போது அங் காளம்மன், பெரியாண்டிச்சி, முனியப்பன், கருப்பண்ணன் வேட மணிந்த பக்தர்கள் நடனமாடியபடி ஊர்வலமாக சுடுகாட்டிற்கு சென்று நேர்த்திக்கடனை செலுத்துவர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயான கொள்ளை தேர் திருவிழா நடைபெறும் . சுவேத நதிக்கரையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ரத்த சாதம் படையலிட்டு பக்தர்களுக்கு வழங்குவர். வாணியம்பாடி பாலாற்றின் கரையோரத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியில், அம்மன் சிலை மற்றும் பூங்கரகம் ஊர்வலமாக வந்த அரசுரன் கண் முட்டை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும் உத்திரமேரூரில் உள்ள ஸ்ரீ அங்காளம் மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடனை செலுத்துவர்.

17-2-2026 – செவ்வாய் கோவை கோனியம்மன் பூச்சாற்று விழா

கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனி யம்மன் கோயில் கோவை டவுன்ஹாலில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெற்று வரும் அதன் ஒரு பகுதியாக இன்று பூச்சாற்று நிகழ்ச்சி நடைபெறும். காலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டு மாலையில் பூச்சாட்டு விழா நடக்கும் இதற்காக பூ கம்பம் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படும். பிறகு அந்தக் கம்பம் ஊர்வலமாக பல்வேறு வீதிகள் வழியாக கோயிலை அடையும். அங்கு மறுபடியும் பூஜை செய்யப்படும். அந்தக் கம்பத்திற்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபடுவர்.

18-2-2026 – புதன் கோச்செங்கட்சோழன் குருபூஜை

கோச்செங்கண் (கோச்செங்கட்சோழன்) சங்க கால சோழ மன்னர்களில் ஒருவர், இவர் காவிரி கரையில் 70-க்கும் மேற்பட்ட மாடக் கோயில்களை எழுப்பியவர். யானைகள் ஏற முடியாத அளவு சிவபெருமான் சந்நதியை உயர்த்தி அமைத்து, (மாடக் கோயில்கள் ) சிவ பக்தராகத் திகழ்ந்தவர். திருவானைக்கா ஜம்பு கேஸ்வரர் கோயில் போன்ற கோயில்கள் இந்த அமைப்பில் கட்டப்பட்டது.இவர் முற்பிறவியில் சிலந்தியாக இருந்து சிவனுக்குத் தொண்டு செய்ததன் பலனாக, இந்தப் பிறவியில் சோழ மன்னனாகப் பிறந்தார். 63 நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். சிவ கோயில்கள் தவிர, திருநரையூர் நம்பி (நாச்சியார் கோயில்) கோயிலையும் கட்டியவர்.அவர் குருபூஜை இன்று.

19-2-2026 – வியாழன் காளஹஸ்தி கிரி பிரதட்சணம்

காளஹஸ்தி மகா சிவராத்திரி பிப்ரவரி 10-ல் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி, முக்கிய நிகழ்வான மகா சிவராத்திரி வழிபாடு மற்றும் நிஷிதா கால பூஜை பிப்ரவரி 15-இரவு முதல் 16-ஆம் தேதி காலை வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் பத்தாவது நாளில் 19.2.2026 ஸ்ரீ காளஹஸ்தி நாதர் கிரிவலம் வருவது வழக்கம். மகா சிவராத்திரியின் போது நடக்கும் சிவ பார்வதி கல்யாணத்திற்கு வந்திருந்த தேவர்கள், முனிவர்களை விடை தரும் வகையில் கைலாச கிரிவலம் நடத்துவது வழக்கம். ஞானப்பிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர், கோயிலுக்கு அருகாமையில் உள்ள 21 கி.மீ தூரமுள்ள கைலாசகிரி மலையைச் சுற்றி வலம் வருவார். காலை 8 மணி முதல் ஜனதா அம்பாரிகளில் கைலாச கிரிவலம் நடைபெறும். கூடவே ஏராளமான பக்தர்களும் ஹர ஹர சிவ சிவ கோஷத்தோடு கிரிவலம் வருவது அற்புதக் காட்சியாக இருக்கும்.

Related Stories: