மதுரை: சிறைச்சாலைகளில் புகையிலை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விதிகளை கடுமையாக பின்பற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சையத் அலி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய மத்தியச் சிறைகளிலும், தென் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டச்சிறைகளிலும், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாடு தொடர்பாக விதிக்கப்பட்ட தடையை கடுமையாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். புகை பிடிக்காத சிறைக்கைதிகளை தனியாக பிரித்து வைக்கும் முறையை அமல்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், சிறைகளில் புகையிலைப்பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் உள்ள விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.
