மூணாறு: மூணாறு அருகே, புலி தாக்கி பலியான பசுமாட்டின் உடலை சாலையில் கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள சட்டமூணார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டி. இவர் கறவை பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற இவரது பசு மாடு ஒன்றை புலி தாக்கி கொன்றது. கடந்த 2 மாதங்களில் மட்டும் பாம்பன்மலை, சட்டமூணார், காப்பி ஸ்டோர் மற்றும் மறையூர் பகுதிகளில் புலி தாக்கி 8 பசுமாடுகளை கொன்றுள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புலியின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய வனத்துறையைக் கண்டித்து, உயிரிழந்த பசுமாட்டின் உடலை வாகனத்தில் ஏற்றி வந்து சட்டமூணார் வனத்துறை சோதனைச் சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து பாஜக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால், மூணாறு-உடுமலைப்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த பசுமாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்; ல்நடைகளைத் வேட்டையாடும் புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும். எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்துறை ரோந்து செல்ல வேண்டும். வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
