சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்தில் நுழைந்த ஒற்றை யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் மலை கிராமங்களுக்குள் நுழைந்து விளைநிலத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. விவசாயிகளும், வனத்துறையினரும் இரவு முழுவதும் கண்விழித்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சிங்கன்புரம் கிராமத்தில் நுழைந்த ஒற்றை யானை விவசாய நிலங்களில் நடமாடுவதை கண்ட விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் இணைந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒற்றை யானை தார் சாலையில் வேகமாக ஓடியது. வனத்துறையினரும், விவசாயிகளும் யானையை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திச்சென்று வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். தினமும் இரவு கண்விழித்து பயிருக்கு காவல் இருப்பதால், பகல் நேரங்களில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் திணறிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
