×

பொய்கையில் இன்று நடந்த மாட்டுச்சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு வியாபாரம்: வியாபாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று மாடுகள் வரத்து அதிகரித்ததால் விற்பனை அமோகமாக நடந்தது. இதனால் ₹80 லட்சத்தக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று கால்நடை சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் சீசன் நேரங்களில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

இந்நிலையில் வழக்கம்போல் இன்று மாட்டுச்சந்தை கூடியது. இதில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 1200க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் வியாபாரம் களைக்கட்டியது. விற்பனை அமோகமாக நடந்ததால் ரூ.80 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் ‘வேலூர் மாவட்டத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் வரும் காலங்களில் தீவனம் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. அப்போது மாடுகள் விற்பனை செய்தால் குறைந்த விலைக்குதான் போகும். அதனால் முன்கூட்டியே கால்நடைகளை விற்பனை செய்ய விவசாயிகள், மாடுகளை விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். இதனால், இன்று நடந்த சந்தையில், மாடுகள் வாங்க விவசாயிகளும், வியாபாரிகளும் போட்டி போட்டனர். இதனால் சுமார் ரூ.80 லட்சம் வரை வியாபாரம் நடந்துள்ளது. இனி வரும் வாரங்களில் மாடுகள் வரத்து அதிகரிக்கும். ‘ என்றனர்.

Tags : Laika ,Vellore ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் விவசாய...