சேலத்தில் 13ம் தேதி விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி

சேலம்: தவெக தலைவர் நடிகர் விஜய், சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த செப்டம்பர் மாதத்திற்கு முன்பு பிரசாரத்தை தொடங்கினார். கரூரில் நடந்த பிரசாரத்தின் போது, 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர். இதையடுத்து பிரசார பயணத்தை நடிகர் விஜய் ரத்து செய்தார். தற்போது மக்கள் சந்திப்பு என்ற பெயரில், விஜய் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார். தவெகவின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், தெற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரசன்னா பாலாஜி மற்றும் நிர்வாகிகள், கடந்த 4ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, கமிஷனரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள திடலில் நடக்கிறது. இதில் நிர்வாகிகள் 5000 பேர் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அதன் பேரில், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு மாநகர உதவி கமிஷனர்கள் பரவாசுதேவன், சரவணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நேற்று சேலம் மாநகர் அன்னதானப்பட்டி சரக உதவி கமிஷனர் பரவாசுதேவன், சேலம் சீலநாயக்கன்பட்டியில் வரும் 13ம் தேதி நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளார். அதில், கூட்டத்துக்கு கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் வரக்கூடாது. ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவர்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும். மதியம் 12 மணி முதல் 3 மணிக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும். கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகளுக்கு டோக்கன் வழங்கி, அவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். போலீஸ் பாதுகாப்புக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: