தேமுதிகவோட பேச்சு நடத்தல: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நயினார்

தமிழக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று காலை நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை என முதல்வர் சொல்லி இருப்பது அவர்களது கூட்டணிக்காக இருக்கலாம். தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும்.தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். யார் தேர்தலில் அதிகம் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் இருக்கிறார்களோ அவர்கள்தான் அமைச்சர்களாக இருப்பர். ஆட்சியில் பங்கு என்ற எந்த டிமாண்ட்டும் எங்களிடம் கிடையாது.

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று தெளிவாக கூறிவிட்டோம். தேமுதிகவிடம் கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை. ஓபிஎஸ்சை அழைப்பது தொடர்பாக இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சசிகலா நிலைப்பாடு இதுவரை என்ன என்பது தெரியவில்லை. அவர்களது நிலைப்பாடு தெரிந்தவுடன் அடுத்த கட்ட முடிவு மேற்கொள்ளப்படும். வரும் தேர்தலில் முதல்வராக விஜய் வருவார் என செங்கோட்டையன் சொல்கிறார். முதலில் அவர் கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெறட்டும். அதன்பிறகு பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேமுதிகவுடன் பாஜ தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். இதேபோல், ‘‘அதிமுக பேசி தேமுதிக படியல… மந்திரி பதவிலாம் கேட்குறாங்க… அதான் பாஜ பேசுது’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் தெரிவித்தார். தேமுதிக பொதுச்செயலாளரும் இரண்டும் பக்கம் கூட்டணி பேசு வருவதை ஒப்புக்கொண்டார். ஆனால், நயினார் நாகேந்திரான தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை மதுரையில் நிருபர்களை சந்தித்த நயினார், தேமுதிகவுடன் பாஜ தரப்பில் இதுவரை கூட்டணி பேசவில்லை. தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர். நாங்கள் அதிமுகவில் ஆட்சியில் பங்கு கேட்கவே இல்லை’ என்று காலையில் என்ன சொன்னாரோ அதை அப்படியே மீண்டும் ஒப்பித்தார். தொடர்ந்து, அவரிடம், சசிகலா தனிக்கட்சி தொடங்கி அதிமுக வாக்குகளை பிரிக்க போவதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு, ‘‘நாங்க யாரையும் கஷ்டப்பட்டு கூட்டணிக்கு கூட்டிட்டு வரவில்லை. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. இதற்கிடையில் பல மாற்றங்கள் ஏற்படும்’’ என்றார்.

* ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாஜ, வரும் தேர்தலில் வென்றால் கூட்டணி ஆட்சி என்று அதன் தலைவர்கள் மோடி, அமித்ஷா தொடங்கி அனைவருமே பேசி வருகின்றனர். ஆட்சி பங்கு என்று போகும் இடமெல்லாம் பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர். அதிமுக ஆட்சி மற்றும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்று சொல்ல மறுக்கின்றனர். எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி வந்த நயினார், ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* கட்சி மாறும் ‘இலை’ சீனியர்கள்
திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் மாஜி அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இரு ேகாஷ்டிகளாக செயல்பட்டு வரும் நிலையில், வேடசந்தூர் மாஜி எம்எல்ஏ டாக்டர் பரமசிவம் என்பவர் மூன்றாவதாக ஒரு கோஷ்டியை உருவாக்கி நடத்தி வருகிறார். பொதுச்செயலாளர் எடப்பாடியின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி மாஜிக்கள் இருவருக்கும் செம டப் கொடுத்து வருகிறார். இதனால், வேடசந்தூர் தொகுதியில் இவருக்கு போட்டியாக மாஜி எம்எல்ஏவான தென்னம்பட்டி பழனிச்சாமி என்பவரை மாஜிக்கள் இருவரும் ஒன்றாக இணைந்து, போட்டியாக களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.

இதனால் இவர்கள் இருவரும் யார் பெரியவர் என்ற கணக்கில் போஸ்டர்களை மாறி, மாறி ஒட்டி தினமும் யுத்தம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேடசந்தூர் தொகுதி உள்கட்சி விவகாரம் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் நேரடியாகவே திண்டுக்கல் சீனிவாசன் முன்பாக கொதித்து, தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களை யாரும் மதிப்பதில்லை. தலைமைக்கு தவறான தகவல் மட்டுமே போகிறது.

உள்ளூர் நிலவரம் தெரியாமல் கட்சி தலைமை முடிவெடுக்கிறது. இப்படியே போனால் நிலைமை வேறு விதமாக மாறும் என ஆளாளுக்கு கொதித்துள்ளனர். ஒருபடி மேலே போய் சிலர், மாற்று கட்சியினரை தொடர்பு கொண்டு முகாம் மாறவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் ெவளியாகியுள்ளது. ‘‘கோஷ்டிப்பூசல் உச்சத்துக்கே போய் விட்டது. இனியும் இது சரியாகிற மாதிரி நிலைமை இல்லை. பேசாமல் வேறு இடமாகப் போய் கடையை விரித்து விடலாம் போல…’’ அதிமுக சீனியர் நிர்வாகிகள் சிலரே பகிரங்கமாகப் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

Related Stories: