*ஓடும் ரயிலில் நெல்லை ரயில்வே போலீஸ் விழிப்புணர்வு
நெல்லை : சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், தங்கம் விலை உயர்வைக் சுட்டிக்காட்டி பயணிகளுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழியும்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க ரயில்வே போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை ரயில்வே போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் தேவராஜன் என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்.
அவர் வெறும் ரோந்துப் பணியோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு பெட்டியாகச் சென்று பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அப்போது அவர் பேசுகையில், ‘பயணிகள் அனைவரும் தங்களது செல்போன், பணம் மற்றும் உடைமைகளை மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ரயிலில் முன்பின் தெரியாத நபர்கள் அன்பாகப் பேசி பிஸ்கட் அல்லது குளிர்பானம் கொடுத்தால் அதை யாரும் வாங்கிச் சாப்பிட வேண்டாம். மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பலிடம் ஏமாந்து விடாதீர்கள். குறிப்பாக பெண்கள் அணிந்துள்ள தங்க நகைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தற்போது தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிராம் தங்கம் விலை 14 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. இந்த விலை உயர்வை சாதகமாக்கிக் கொண்டு மர்ம நபர்கள் கூட்ட நெரிசலில் கைவரிசை காட்ட வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் ஜன்னலோரம் அமரும் போதோ, தூங்கும்போதோ தங்களது கழுத்தில் கிடக்கும் நகையை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ரயிலில் பயணம் செய்யும்போது யாருக்காவது ஏதேனும் பிரச்னை என்றால் ரயில்வே போலீஸ் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கோ அல்லது 139 என்ற எண்ணுக்கோ உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம். தகவல் தெரிவித்த அடுத்த நிமிடமே நாங்கள் உங்கள் உதவிக்கு வருவோம்’ என்றார். வழக்கமான அறிவிப்பு போல இல்லாமல், தற்போதைய தங்கம் விலையைச் சுட்டிக்காட்டி அக்கறையுடன் போலீஸ்காரர் பேசியது பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

