- திருச்செந்தூர் கோயில்
- பழனி
- நாராயணமூர்த்தி
- பழனி, திண்டுக்கல் மாவட்டம்
- கைலாச குடும்பரா
- ஆதிநாதபுரம், தூத்துக்குடி மாவட்டம்
பழநி : கிபி 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருச்செந்தூர் கோயில் விலைக்கிரய பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:தூத்துக்குடி மாவட்டம், ஆதிநாதபுரத்தை சேர்ந்த கைலாச குடும்பர் என்பவர் அவரது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்புப்பட்டயம் ஒன்றை படித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பட்டயத்தை ஆய்வு செய்ததில் அது கி.பி.18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும், அன்றைய திருச்செந்தூர் கோயில் நிலம், தென்இருகரை நாட்டு குடும்பர்களுக்கு விலைக் கிரையம் செய்து கொடுக்கப்பட்டது என்பதும் தெரிய வருகிறது.
இந்த செப்பேடு 28.7×17.5 செ.மீ அளவில் 352 கிராம் எடையுடன் உள்ளது. செப்பேட்டின் இருபுறமும் 61 வரிகளில் இந்த சாசனம் எழுதப்பட்டுள்ளது. இது 1738ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அன்று எழுதப்பட்டது உறுதியாகிறது.
அன்றைய திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகதாரரான தலத்தார், தானத்தார், நாட்டுக்கணக்கு ஆகிய பிள்ளை, நம்பியார், பண்டாரம், செட்டியார், கரையாளர் என வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த 12 பேர், திருச்செந்தூர் முருகன் கோயில் நிலத்தை தென்இருகரை நாட்டுக் குடும்பர்கள் 9 பேருக்கு விலை கிரையம் செய்து கொடுத்துள்ளனர். இந்தக் கோயில் நிலத்துக்கு 19 பொன்னும், ஒரு பணமும் விலை நிர்ணயம் செய்து பெற்றுக் கொண்டுள்ளனர்.
சாசனத்தை எழுதிய 12 கோயில் நிர்வாக அதிகாரிகள், நிலத்தை பெற்றுக் கொண்ட 9 குடும்பர்கள், சாசனத்தில் கையெழுத்திட்ட 11 பேர், சாசனத்துக்கு சாட்சிகள் 5 பேர் என அனைவரின் பெயர்களும் அவர்களின் சாதிப்பெயர்களுடன் இடம் பெற்றுள்ளது. சாசனம் செய்த கோயில் அதிகாரிகள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையில் நிலத்தை வாங்கிய 9 பேரும் குடும்பர்களாகவே இருந்துள்ளனர் என்பது பல சமூக ஆய்வுகளுக்கு வழி வகுக்கும்.
இந்த செப்பேடு சந்திர கிரகணம் நிகழ்ந்த பவுர்ணமி அன்று எழுதப்பட்டுள்ளது. தற்காலத்தில் கிரகண நாள் என்பது தீட்டாக கருதப்படுகிறது. பண்டைய கல்வெட்டுகள் கிரகண நாட்களை புண்ணிய காலம் என்று கூறுகின்றன. கிரகண நாட்களில் கொடைஅளிப்பது, கொடைபெறுவது பல மடங்கு புண்ணியம் தரும் என்பது பண்டைய தமிழர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.

