×

கோழிப்பண்ணையில் இருப்பு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி தொழிலாளி உடல் கருகியது

*மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பாப்பாரப்பட்டி : பாப்பாரப்பட்டி அருகே கோழிப்பண்ணையில் இருப்பு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் உடல் கருகிய தொழிலாளி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்.

இவர் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மறுவீட்டுப்பள்ளம் பகுதியில், பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஆலையில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த மாதேஷ்(40) என்பவர் பட்டாசு தயாரிக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார். பட்டாசு தொழிற்சாலைக்கு அருகில் உள்ள கோழிப்பண்ணையில், தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்தது போக மீதமான பட்டாசுகளை சேமித்து இருப்பு வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை, பட்டாசு இருப்பு வைக்கப்பட்டிருந்த கோழிப்பண்ணையின் கதவை திறந்து மாதேஷ் உள்ளே சென்றுள்ளார். அப்போது உள்ளிருந்த பட்டாசு திடீரென வெடிக்க தொடங்கியது. பயங்கர வெடிச்சத்தத்துடன் மாதேஷ், கட்டிடத்தை பிய்த்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தார்.

சத்தம் கேட்டு வந்தவர்கள் தீக்காயங்களுடன் கிடந்த மாதேசை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் இருப்பு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால், கட்டிடம் முழுவதுமாக சேதமானது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாலக்கோடு தீயணைப்பு மீட்பு துறையினர், பட்டாசு குடோன் பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், பாப்பாரப்பட்டி போலீசார், தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Papparapatti ,Dharmapuri district ,Pennagaram… ,
× RELATED தாஜ்மகால் ரோஜாவிற்கு மவுசு...