- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- ஜாகுவார் லேண்ட் ரோவர்
- ராணிப்பேட்டை
- டாடா நிறுவனம்
- பனப்பாக்கம் சிப்காட்
- டாடா கார்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.டாடா கார் ஆலைக்கு கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 9,000 கோடி முதலீடு செய்துள்ளது. ராணிப்பேட்டையில் முதல் கட்டமாக டாடா நிறுவனம் ரூ.914 கோடியில் தொழிற்சாலை அமைத்துள்ளது. 190 ஹெக்டேரில் அமைந்துள்ள கார் உற்பத்தி ஆலையால் முதல் கட்டமாக 1,650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆலையில் ஆண்டு உற்பத்தி திறன் 2.5 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் இருக்கும் என்றும், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் உற்பத்தி இலக்கும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆலை அடுத்த தலைமுறை சொகுசு பிரீமிம் கார்கள் மற்றும் புதிய மின்சார வாகனங்களின் உற்பத்திக்கான மையமாக செயல்படும் என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

