*டிரைவருக்கு கால் முறிவு
*திருச்சி அருகே பரபரப்பு
முசிறி : விபத்தில் சிக்கி வாய்க்காலில் கவிழாமல் தலைகீழாக அந்தரத்தில் தொங்கிய காரால் திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. கால் முறிவுடன் டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த தினேஷ்(25), அதே ஊரை சேர்ந்த உறவினர்கள் சங்கர்(22), தமிழ்ச்செல்வன் (29), ஹரிஷ் (19) ஆகிய 4 பேரும் காரில் சமயபுரம் கோயிலுக்கு நேற்று அதிகாலை வந்தனர். காரை தினேஷ் ஓட்டினார். தரிசனம் முடிந்து மீண்டும் காலை 7.30 மணியளவில் ஊருக்கு திரும்பினர்.
திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் முசிறி சந்தப்பாளையம் அருகில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வரத்து வாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியை உடைத்துக்கொண்டு, அருகிலிருந்த மரத்தில் மோதி வாய்க்காலில் விழாமல் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியது.
இதில், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தினேசுக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்ற 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டன. இந்த விபத்தை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், காருக்குள் சிக்கி இருந்த அனைவரையும் மீட்டு முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

