ஜெயங்கொண்டம் : தென்னை மரத்தில் கரையானை கட்டுப்படுத்த இயற்கை செயல்பாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில், தென்னை மரத்தில் ஏற்படும் கரையான் தாக்குதலைத் தடுக்க இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு தகவல் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்களால் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், சுண்ணாம்பு தூள் 1 கிலோ, வேப்பெண்ணெய் 100 மில்லி, குளோர்பைரிபாஸ் (பூச்சிக்கொல்லி) 250 மில்லி ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து திரவம் தயாரித்து, தேங்காய் மரத்தின் அடிப்பகுதியிலிருந்து 4 அடி உயரம் வரை வெளிப்புறமாக பூசுவதன் மூலம் கரையான் தாக்கத்தை குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தென்னை மரத்தில் உள்ளக் கரையான் தாக்குதலை குறைக்கும் இயற்கை வழிமுறைகள், நாட்டுப்புற மருந்துகள் பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறைகள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வேளாண் இறுதியாண்டு மாணவிகள் ஹரிணி, ஹரிணி, தில்ஷா, தேஜஸ்வினி, ஞானாம்பிகை, தனுஷி, கௌசல்யா, பவ்மிதா, தனலெட்சுமி, இளவரசி ஆகியோர் இணைந்து நடத்தினர். மேலும் இந்நிகழ்ச்சி மூலம் விவசாயிகள் இயற்கை முறைகளில் கரையான் தாக்குதல் கட்டுப்பாடுக் குறித்து தெளிவுபெற்று, குறைந்த செலவில் அதிக மகசூல் பெற உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.
