- ஜல்லிக்கட்டில்
- பெரம்பலூர்
- Poolambadi
- அரசலூர்
- Annamangalam
- Visuvakudi
- Kallapatti
- சிலக்குடி
- கொளத்தூர்
*76 வீரர்கள் படுகாயம்
பெரம்பலூர் : பெரம்பலூர் பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 616 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்க 390 வீரர்கள் மல்லுக்கட்டினர். 76 வீரர்கள் காயம் அடைந்தனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, பூலாம்பாடி, கள்ளப்பட்டி, சில்லக்குடி கொளத்தூர், தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு 2026ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக நேற்று வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி கிராமத்திலுள்ள மேற்குத்திடலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்தப் போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பேபி நிர்மல், மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) கோபாலச் சந்திரன், தாசில்தார் துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 616 ஜல்லிக்கட்டு காளைகள் கால்நடை துறையினரின் பரிசோதனைக்கு பின்னர் களமிறக்கப்பட்டன.
அதேபோல் சுகாதார துறையினரின் பரிசோதனைக்கு பின்னர் 390 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக காளைகளை அடக்கி, விழாக் குழுவினர் அறிவித்திருந்த நாடாக்கட்டில், ஷோபா, பிளாஸ்டிக் சேர், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் ரொக்கப் பரிசு உள்ளிட்ட பரிசு பொருட்களை தட்டிச் சென்றனர்.
பூலாம்பாடி பேரூராட்சித் தலைவர் பாக்கியலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் ருக்குமணி மற்றும் பூலாம்பாடி ஜல்லிக் கட்டு பேரவையினர் விழாவிற்கான ஏற்பாடுகளை இணைந்து செய்திருந்தனர். கால்நடைத்துறை உதவி இயக்குனர்களான டாக்டர்கள் மூக்கன், குமார் உள்ளிட்டோர் காளைகளை பரிசோதித்து வாடிவாசலுக்கு அனுப்பி வைத்தனர்.
பூலாம்பாடியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் பொது மக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் பூலாம்பாடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 76 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.
அனைவருக்கும் சுகாதாரத்துறையினர் ஜல்லிக்கட்டு திடல் அருகிலேயே முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர். அவர்களில் கால் சிராய்ப்பு ஏற்பட்ட 3பேர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
காளைகளில் ஒரு காளைக்கு முன்னங்கால் முட்டி ஒடிந்துவிட்டது. மற்றொரு காளை வேறொரு காளை முட்டியதால் முதுகில் ஓட்டை விழுந்து. இவைகளுக்கு கால் நடைத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு டிஎஸ்பிக்கள் ஆரோக்கியராஜ், ஆனந்தி, இன்ஸ்பெக்டர்கள் அரும்பாவூர் கோபால், பெரம்பலூர் பிரபு, இந்திரா, கயல்விழி, சண்முகசுந்தரம் மற்றும் சப்.இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் என 150 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
