×

அடர்ந்த காட்டிலிருந்து வெளியேறி ஆழியார் அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானை

*வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த அடர்ந்த காட்டிலிருந்து வெளியேறி சுற்றித் திரியும் ஒற்றை யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனத்தில் கடந்த ஆண்டில் அடுத்தடுத்து பெய்த பருவ மழைகளால் வனப்பகுதி செழித்தது. வனத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தண்ணீரை தேடி வனத்திலிருந்து விலங்குகள் இடம் பெயர்வது குறைந்தது.

இந்நிலை கடந்த டிசம்பர் மாதம் வரை இருந்தது. இருப்பினும், அவ்வப்போது யானைகள் தனித்தனியாக சுற்றித்திரிந்தது. ஆனால் தற்போது மழையின்றி வறட்சி ஏற்பட துவங்கியுள்ளது. இதனால் அடர்ந்த வனத்திலிருந்து விலங்குகள் இடம்பெயர்ந்து நீர் நிலையை தேடி வருகிறது.இதில் கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் அடர்ந்த காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை அங்குமிங்குமாக சுற்றித்திரிந்தது.

அதிலும், ஆழியார் அணை பின்புறம் வழியாக ரோட்டை கடந்து சென்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாலையில் ஒற்றை காட்டு யானையானது ஆழியார் அணைப்பகுதிக்கு ஹாயாக சென்று தண்ணீர் குடித்து விட்டு பின் வால்பாறை மலைப்பாதையை கடந்து சர்க்கார்பதி நோக்கி சென்றுள்ளது.

சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வால்பாறை ரோடு வழியாக யானை செல்வதால் யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆழியார், கவியருவி மற்றும் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் பகல் நேரத்தில் வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும்போது கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aliyar ,Forest Department ,Pollachi ,Anaimalai Tiger Reserve forest ,Western Ghats ,
× RELATED TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம்!