×

தாமரை நிர்வாகிகளிடம் சீட்டுக்கு கெஞ்சும் இலை கட்சி மா.செ…!

நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், மாவட்டத்தின் தலைநகரமாக உள்ள ஊட்டி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக உள்ளது. இத்தொகுதியில் நீண்ட காலமாக திமுக., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பல மூத்த தலைகளை பின்னுக்கு தள்ளி ஊட்டி தொகுதியில் அதிமுக., சார்பில் போட்டியிட்ட தற்போதைய மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தோல்வியடைந்தார். அடுத்தமுறை எப்படியாவது வெற்றிபெற்று விடவேண்டும் என்ற நோக்கில் தொகுதி முழுக்க வலம் வந்தார்.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக., பா.ஜ., கூட்டணி வைத்த நிலையில், ஊட்டி தொகுதியில் பா.ஜ., போட்டியிட்டது. இதனால் விரக்திக்குள்ளான கப்பச்சி வினோத், தொகுதி மாறி குன்னூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். நீலகிரி மாவட்ட அதிமுக.,வில் தற்போது முக்கிய தலைவர்கள் இல்லாத நிலையில் இவர் ஒருவரே கோலோச்சி வருகிறார். தன்னை மீறி யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார். ‘’இருமுறை விட்டு விட்டேன்… இம்முறை விடமாட்டேன்…’’ என கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வந்தார்.

ஆனால், அதிமுக-பா.ஜ. மீண்டும் கூட்டணி என்ற செய்தி இவரது தலையில் இடியாய் வந்து இறங்கியது. ஊட்டி தொகுதி தங்களுக்கு சாதகமான தொகுதி என பா.ஜ., கருதுகிறது. அதனால் இம்முறை கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர் பா.ஜ. நிர்வாகிகள். கடந்த முறை ஊட்டி தொகுதியில் பாஜ.,விற்கு வாக்குகள் குறைந்த பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வாக்காளர்களை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

அடுத்தடுத்து இருமுறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் தோல்வியடைந்ததால், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் அதிமுக., மா.செ., கப்பச்சி வினோத்தின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக இது உள்ளது. இம்முறை போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தனது அரசியல் வாழ்க்ைக கேள்விக்குறியாகி விடும் என்ற நடுக்கத்தில் இருக்கிறார் கப்பச்சி.

அதனால், கடைசி அஸ்திரமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியை நாடி உள்ளார்.அவர் மூலமாக ஊட்டி தொகுதியை கைப்பற்ற முயன்று வருகிறார். மற்றொருபுறம் குன்னூரில் உள்ள ஒரு ஆர்எஸ்எஸ்., முக்கிய பிரமுகர் மற்றும் உள்ளூர் பா.ஜ., முக்கிய பிரமுகர்களை அணுகி, ‘’ஊட்டி தொகுதியை கேட்டு நீங்கள் அழுத்தம் தர வேண்டாம்… எனக்கு விட்டுத்தாருங்கள்…’’ என கெஞ்சி வருகிறார். ஆனாலும் ஊட்டி தொகுதியில் அதிமுக போட்டியிடுவது கஷ்டம்தான் என்கிறார்கள்.

Tags : Leaf Party ,Lotus ,Nilgiris ,Ooty ,DMK ,Congress ,
× RELATED தேர்தல் முடிந்ததும் காணாமல் போகும்...