×

ஆண்டிபட்டி அருகே பரிதாபம் பஸ்சிற்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதி 3 பேர் பலி: அதிவேகமாக ஓட்டி வந்த கேரள இளைஞர் கைது

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பஸ்சிற்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலியாகினர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேனி, மதுரை, வருசநாடு மற்றும் வைகை அணை பகுதிகளுக்குச் செல்லும் 4 சாலைகள் சந்திக்கும் க.விலக்கு பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து மிகுந்த இடமாக உள்ளது. க.விலக்கு சந்திப்பில் உள்ள பஸ் ஸ்டாப்பில் ஏராளமான பொதுமக்கள் பஸ்சிற்காக நேற்று காத்திருந்தனர்.

அப்போது, தேனியில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகள் மீது மோதி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. படுகாயமடைந்தவர்களை மீட்டு தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், கண்டமனூர் வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் (75), செல்வம் (50) மற்றும் ஏரதிமக்காள்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (60) ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரசரடியைச் சேர்ந்த பாக்கியலட்சுமிக்கு (39) சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிந்து அதிவேகமாக காரை ஓட்டிய கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமாரை கைது செய்தனர்.

Tags : Andipatti ,Kerala ,Theni district ,K.Vilakkam ,Theni ,Madurai ,Varusanadu ,Vaigai Dam ,
× RELATED தேர்தல் முடிந்ததும் காணாமல் போகும்...