புதுச்சேரி: நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க வலியுறுத்தப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். ஒன்றிய இணைஅமைச்சர் எல்.முருகன் நேற்று புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலமாக சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் கூடுதல் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு, 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பட்ஜெட்டாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
இதற்காக சிறு துறைமுகங்களை மேம்படுத்தி நீர் வழி போக்குவரத்தை 12 சதவீதமாக உயர்த்துவதன் மூலம் புதுச்சேரியும் பயன்பெறும். ரூ.106 கோடியில் ஏக்தாமால் திட்டம் முக்கிய நகரங்களில் துவங்கப்பட உள்ளது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத் இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டம், ஒடிசா முதல் சென்னை வரையிலான கனிம வள வழித்தடம் அமைப்பதன் மூலம் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு, புதுச்சேரியின் வேகமான வளர்ச்சிக்கு உதவும்.
பயோ பார்மா உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதால், புதுச்சேரி மருந்து உற்பத்தியாளருக்கு பயனளிக்கும். நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க வலியுறுத்தப்படும். தேர்தலுக்காக பட்ஜெட் தயாரிக்கவில்லை, நாட்டின் வளர்ச்சிக்காத்தான் பட்ஜெட் உள்ளது. தேஜ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வரவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடத்துவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
