×

தேர்தல் முடிந்ததும் காணாமல் போகும் வெற்றுக்கூச்சல் போடும் கூட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

விருதுநகர்: விருதுநகரில் நேற்று நடந்த தென்மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருப்பது இளைஞரணி தான். ஆனால் எந்த பலமும் இல்லாமல், கொள்கை இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ஏன் அவர்களுக்கே எந்த பயனும் இல்லை.

இதை தமிழ்நாட்டு மக்கள் விரைவில் அவர்களுக்கு உணர்த்துவார்கள். இதுவரை தமிழ்நாட்டை கண்டுக்கொள்ளாமல் இருந்த பிரதமர் நரேந்திரமோடி, இப்போது தமிழ்நாட்டுக்கு வர ஆரம்பித்து இருக்கிறார். அதற்கு என்ன காரணம்? தேர்தல் வந்தாலே மோடிக்கு தமிழ்நாடு நினைவுக்கு வந்துவிடும். இனிமேல் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். திருக்குறள் கூறுவார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மகிழ்ச்சியான அணியாக இருக்கிறது. திருவிழா நேரத்தில் புதுப்புது கடைகள் எல்லாம் கிராமத்துக்கு வரும்.

அந்த கடைக்காரர்கள் வியாபாரத்துக்காக பொய்யான வாக்குறுதிகளை கூறுவார்கள். குழந்தைகளுக்கு எல்லாம் ஷோ காட்டுவார்கள். அது மாதிரி தான் இப்போது தமிழ்நாட்டில் சிலர் புதிய கடைகளை விரிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். திருவிழாவுக்காக போட்ட கடைகள் எல்லாம் திருவிழா முடிந்தவுடன் எப்படி காணாமல் போகுமோ, அதேபோல் இந்த தேர்தல் முடிந்ததும் அந்த கடைகள் அனைத்தும் காணாமல் போகும். ஆனால் திமுக தான் மக்களோடு, மக்களாக நிற்கும்.

வழக்குகளில் இருந்து காப்பாற்றுவதாக வாக்குறுதிகளை கொடுத்து தமிழகத்தில் அடிமைகளை சிலர் சேர்த்து இருக்கிறார்கள். பாஜவின் மிரட்டலுக்கு அதிமுக வேண்டும் என்றால் பயப்படலாம். திமுக ஒருபோதும் பயப்படாது. ஏன் என்றால் எங்களை வழி நடத்துவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான தலைவர். தமிழ்நாடு என்றுமே பாஜவின் கையில் சிக்காது. எங்கள் தலைவர் அடிக்கடி கூறுவார். என்றுமே தமிழ்நாடு, டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல்தான். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் இல்லை.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை படித்து முடிப்பதற்குள் எடப்பாடி பழனிசாமி அவருக்கு சிறப்பான பட்ஜெட் என வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார். சில கட்சியில் முரட்டு பக்தர்கள், தொண்டர்கள் இருப்பார்கள். அதேபோல் இவர்கள் முரட்டு அடிமைகள். இவ்வளவு நாளாக அதிமுக, பாஜவின் கிளையாக இருந்தது.

இப்போது இலையாக மாறிவிட்டது. அதிமுக, பாஜ கூட்டணியை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இந்த தென் மண்டலத்தில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு இளைஞரணி நிர்வாகிகள் இன்று முதலே கடுமையாக உழைக்க வேண்டும். கழகத்தின் வெற்றி விருதுநகரில் இருந்து தொடங்கட்டும். இவ்வாறு பேசினார்.

Tags : Tamil Nadu ,Udayaniti Stalin ,Virudhunagar ,Deputy Chief ,South Zone Dimuka Youth Executives ,
× RELATED வரியை செலுத்தாமல் ஏமாற்றியவர் ஊழலை...