×

கோட்டையில் ஓட்டை விழும் அபாயம் ஆதங்கத்தில் அன்புமணி பாமகவினர்: சீட்டு கிடைத்தாலும் வெம்பும் நிலை

தேஜ கூட்டணியில் பாஜ தரப்பில் பிரதமர் மோடியை தமிழகம் அழைத்துவந்து பொதுக்கூட்டம் நடத்தி தேர்தல் பணிகளை துவக்கிவிட்டாலும், கூட்டணி கட்சிகள் மத்தியில் கோஷ்டிகள் நிலைப்பாடு செட்டில்மென்ட் ஆகாத ஸ்டண்ட் காட்சிகளுடன் தொடர்கதையாகி வருகிறது. இதில் பிரதான இடத்தை பாமகவின் அன்புமணி டீம் சந்தித்து வருவதாக அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. 1980களில் பாமகவை நிறுவிய ராமதாஸ், தேர்தல் அடையாளத்தில் 91ல் மக்களை சந்தித்து இதுவரை 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் நிலைப்பாட்டை நகர்த்தி வருகிறார்.

தான் கட்சி துவங்கிய நிலையில் தனது குடும்பத்திலோ, தன்னை சார்ந்தவர்களோ கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற மாட்டோம் என்ற கருத்தை பரவவிட்ட நிலையில் அன்புமணியின் வருகை முதல்கட்ட சலசலப்பை ஏற்படுத்தியது. ஒன்றிய அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என அவருக்கான பதவிகளும் பின்தொடர்ந்த நிலையில் தற்போது பாமக எனக்குத் தான் என போர்க்கொடி தூக்கிவிட்ட நிலையில், தொண்டர்கள் மத்தியில் இன்னும் அலைகள் ஓயாத கதையாகவே பாமகவின் தற்போதைய நிலைப்பாடு நகர்ந்து வருகிறது.

கடந்தாண்டு மோதல் உச்சகட்டத்தை தொட்டு தற்போது 2026 தேர்தல் களத்தை தனித்தனி துருவங்களாக சந்திக்க உள்ளது. பாஜவின் கஸ்டடியில் பாமகவின் அன்புமணி டீம் ஐக்கியமான நிலையில் நிறுவனர் ராமதாஸ் தனது தரப்பு தேர்தல் நிலைப்பாட்டை, தனது கூட்டணியை முடிவுக்கு கொண்டு வராமல் இழுபறியாக பேசி வருவது அக்கட்சியினர் மத்தியில் மேலும் குழப்பத்தை நீடித்து வருகிறது. இந்நிலையில் பாமக தொடங்கி தனது முதல் தேர்தல் களத்தில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி தொகுதியில்தான் 1991ல் வெற்றியை பதிவு செய்தது கட்சியின் வரலாறு.

கடலூர் மாவட்ட தேர்தல் களத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய கோட்டையாகவும் நினைக்கிறது. 91ல் ஆரம்பித்த வெற்றி அதன்பின்னர் திமுக, அதிமுக என மாறிமாறி கூட்டணி அமைத்து வெற்றி தோல்வியை சந்தித்த போதிலும், தற்போது கட்சி நிலைப்பாட்டில் பாமகவின் கோட்டையில் ஓட்டை விழுந்த நிலைப்பாடு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தொண்டர்கள் மத்தியிலும் மாம்பழமா? அல்லது மாற்றா? என்ற நிலைப்பாட்டை உருவாக்கி உள்ளது.

தேஜ கூட்டணியில் பாமகவின் அன்புமணி டீம் ஐக்கியமான நிலையில் நெய்வேலி, விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி இவற்றில் ஏதேனும் 3 தொகுதிகளில் களம்காணலாம் என கணக்கு போட்டுள்ளது. பாமகவின் ராமதாஸ் டீமும், இதே தொகுதிகளில் தங்களுக்கும் செல்வாக்கு உண்டு. நாங்கள்தான் பாமக என கூறுவதால், வெற்றியின் பாதை கானல் நீராகவே இதுவரை காட்சியளிப்பதாக கட்சியினர் கலங்கி நிற்கின்றனர்.

இதனால் சீட்டு கொடுத்தாலும் மாம்பழம் பழுக்குமா? என்ற நிலைப்பாட்டில் கடலூர் மாவட்டத்தில் பாமகவின் தற்போதைய நிலை அமைந்துள்ளது. இதுவே அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டுமென்ற குறிக்கோளுடன் இறங்கும் தேஜ கூட்டணிக்கு பேரிடியாகவும் உள்ளது. ராமதாஸ் புதுக்கூட்டணி கணக்கு போட்டாலும் ஒரே அணிக்குள் நடக்கும் ஜல்லிக்கட்டு, மல்லுக்கட்டால் பழம் வெம்பும் நிலையே உள்ளதாக தற்போதைய அரசியல் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

* தர்மபுரியே எனக்கு கோயில் உருகிய சவுமியா
தர்மபுரி வன்னியர் மண்டபத்தில் சவுமியா அன்புமணியின் மகளிர் உரிமை மீட்புப் பயண பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் சவுமியா பேசியதாவது: தர்மபுரியில் எந்த கோயிலை பற்றியும் சொல்ல முடியாது. ஏனென்றால் தர்மபுரியே எனக்கு கோயில் தான். இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

கடந்த 2014ல் இருந்து நான் பிரசாரத்திற்கு வருகிறேன். 2024 தேர்தலில் நான் போட்டியிட வந்தபோது, என்னையும், என் மகள்களையும், பாசத்தோடு அணைத்து கொண்டீர்கள். பொங்கல் பண்டிகை நாட்களில் தர்மபுரி மாவட்ட மக்கள் ரூ.12 கோடிக்கு மது குடித்துள்ளார்கள். 6 மாத டாஸ்மாக் வருமானத்தை கொடுத்தால் போதும், மாவட்டம் பசுமையாக மாறிடும். இவ்வாறு சவுமியா பேசினார்.

Tags : Anbumani ,PMK ,BJP ,Teja alliance ,Modi ,Tamil Nadu ,PMK… ,
× RELATED தேர்தல் முடிந்ததும் காணாமல் போகும்...