×

மாஜியின் ஆருடத்தால் வனத்தில் மதில்மேல் பூனையாக காத்திருக்கும் மாஜியின் நிலை

கடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம் தனி தொகுதியில் திமுகவை எதிர்த்து அதிமுகவில் போட்டியிட்ட அர்ஜுனன், சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விரல்விட்டு எண்ணும் பகுதிகளையே அக்கட்சியால் கைப்பற்ற முடிந்தது. இதனால் 2026 தேர்தலில் மக்களின் மனஓட்டத்தை அறிய இலை தரப்பு ரகசிய சர்வே நடத்தியது. அதில் ஆளும் தரப்புக்கு ஆதரவு குறையாதது தெரியவர, வேட்பாளர் தேர்வு குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது.

அதிமுக முன்னணிகளில் பலர் போட்டியிட விரும்பாமல் நழுவிய நிலையில், விருப்ப மனு அளித்தவர்களை ஒவ்வொருவராக ஓட்டலுக்கு அழைத்து தலைமை பேசியுள்ளது. தனி தொகுதி என்பதால் கூட்டணி கட்சிகளும் போட்டியிட தயங்குவதால் தீவிர ஆலோசனையில் உள்ளதாம். குறிப்பாக பாமக அன்புமணி அணியில் பொருளாளராக உள்ள வடிவேல் ராவணனை முன் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளதாம். பாஜவினரோ செஞ்சியை விரும்புவதால் தனி தொகுதியில் ஆர்வம் காட்டவில்லையாம்.

இதனால் சிட்டிங் இலையே மீண்டும் போட்டியிடும் சூழல் நிலவினாலும் வனம் தொகுதியில் தனிக்காட்டு ராஜாவாக வலம்வர முடியாத விரக்தியில் சிட்டிங் பிரதிநிதி உள்ளாராம். மாஜியின் ஆரூடத்தால், அவரை விட்டுவிட்டு தனியாக எதுவும் செய்ய முடியாது என்பதால், அடுத்தகட்ட வாய்ப்புக்காக சண்முகம் ஆனவரையே மதில்மேல் காத்திருக்கும் பூனையாக சுற்றிசுற்றி வலம் வருகிறாராம். அவரோ மயிலத்தை தனக்கு குறிவைத்துள்ளதால் அங்கு மாம்பழம் தொல்லை வந்து விடக்கூடாது என்பதால் வனத்துக்கு தள்ளிவிட தலைமையிடம் அறிவுறுத்தி இருக்கிறாராம்.

இதுகுறித்து திண்டிவனம் அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, திண்டிவனத்தில் 2 முறை வெற்றிபெற்ற சி.வி.சண்முகம் அமைச்சராக இருந்தும் பெரியளவில் எந்த திட்டத்தையும் இங்கு செய்யவில்லை. 2026லும் போட்டியிட சிட்டிங் பிரதிநிதி விரும்புகிறார். இருப்பினும் சிவி சண்முகத்தை மீறி தனிகாட்டு ராஜாவாக முடியாது என்பதால் கடந்தாண்டு முதலே அவரை மதில்மேல் பூனையாக சுற்றிசுற்றி வந்தபடி உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மாவட்டத்துக்கு பலகோடி மதிப்பிலான புதிய திட்டங்களை வாரி வழங்கியது தொகுதி வாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால் மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளும் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இது அதிமுக கூட்டணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராமதாஸின் சொந்த தொகுதி என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags : Arjunan ,Tindivanam ,DMK ,AIADMK ,2026 ,
× RELATED தேர்தல் முடிந்ததும் காணாமல் போகும்...