கேரள: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை தங்க கவசங்களை வைத்து பூஜை நடத்தியதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
சிறப்பு புலனாய்வு பிரிவு இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு வழக்குகளிலும் உண்ணிகிருஷ்ணன் போத்தி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முன்னாள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகளான முராரி பாபு, சுதீஷ்குமார் மற்றும் ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன் போத்தி ஆகிய 4 பேருக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீன் பெற்ற 4 பேரிடமும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. இதற்கிடையே சபரிமலை வழக்கில் நடிகர் ஜெயராம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த சில நாட்களில் அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராவார் என்று தெரிகிறது. ஏற்கனவே கேரள காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு சென்னையில் வைத்து நடிகர் ஜெயராமையும் விசாரித்தது. நடிகர் ஜெயராம் மற்றும் உன்னிகிருஷ்ணன் போத்தி இணைந்து பூஜை செய்யும் வீடியோதான் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்தியதற்கு அடிப்படை காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
