×

முதல்வரை சந்திக்கும் ஓபிஎஸ்? கருப்பு, சிவப்பு கயிறுடன் சிக்னல்

அதிமுகவில் ஓபிஎஸ்சை சேர்க்கவே மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டதால், அடுத்து என்ன செய்ய போகிறார். புதிய கட்சி தொடங்குவாரா? திமுகவில் சேர்வாரா? தவெகவில் சேர்வாரா? என்று ஆதரவாளர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலையில், அருள் வாக்கு கேட்டு கோயில் கோயிலாக சென்று வருகிறார். ஓபிஎஸ் சென்ற இடமெல்லாம் அவரிடம் கேட்ட கேள்விக்கு, ‘‘எல்லாம் தை பிறந்தால் வழி பிறக்கும்…. தை முடிவதற்குள் முடிவு கிடைக்கும்’’ என கூறி வந்தார்.

கடந்த 4ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடும்பத்தினருடன் சிறப்பு பூஜை செய்தார். அதன் பிறகு தனது முடிவை தெரிவிப்பார் என்றெல்லாம் கூறினர். கோயில் விருந்தினர் மாளிகையில் முதலில் தங்கியிருந்த ஓபிஎஸ் சுவாமி தரிசனம் செய்து வந்த பிறகு தனியாக ஆலோசனை பண்ண வேண்டும் என்பதற்காக திருச்செந்தூரில் உள்ள தனியார் கடற்கரை ரிசார்ட்டில் அவசர அவசரமாக இரண்டு, மூன்று அறைகளை முன்பதிவு செய்து அன்றிரவு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் காலை தனது குடும்பத்தினரான 2 சகோதரிகள், தனது சகோதரர் ராஜாவின் மகன் உள்ளிட்ட குடும்பத்தாருடன் வியாழக்கிழமை என்பதால் மஞ்சள் வேட்டியுடன் வந்து மூலவரை வருஷாபிஷேகத்தில் வழிபட்டார். முதல் நாள் பல யோசனையுடன் மவுனமாக இருந்த ஓபிஎஸ், நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த பிறகு மகிழ்ச்சியோடு இருந்தார்.

சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்த ஓபிஎஸ்சுக்கு அவரது ஆதரவாளர்கள் கருப்பு சிவப்பு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட வெற்றிவேர் மாலையை (வெட்டிவேர்) அணிவித்து கையில் வெண்கலத்தால் ஆன சுமார் 3 அடி வெற்றிவேலையும் வழங்கினர். அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார் ஓபிஎஸ். ஓபிஎஸ் அரசியலில் இருந்தாலும் ஆன்மிகவாதியாக அவ்வப்போது காவி நிறம், பச்சை நிறம், மஞ்சள் நிற வேட்டியை அணிவார். கைகளில் கோயில்களில் இருந்து கயிறுகளையும் கட்டி இருப்பார்.

ஆனால் தற்போது கருப்பு சிவப்பு நிறத்தில் கையில் கயிறு கட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தை உற்று நோக்க வைத்துள்ளது. ஓபிஎஸ்சின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், முருகனை வழிபட்டு விட்டு நல்ல முடிவு எடுப்பதற்காக தான் திருச்செந்தூர் வந்து தங்கி முக்கிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை செய்துள்ளார். இனி இபிஎஸ்சுக்கு எதிராக களம் இறங்குவதற்காக அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொகுதி வளர்ச்சி என்று கூறி கூட நேரில் சந்திப்பார்’ என்றனர்.

ஏற்கனவே சென்னையில் இரண்டு முறை வாக்கிங் சென்றபோதும், வீட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார். அவரது தளபதிகளாக இருந்த வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோர் முதல்வரை சந்தித்து திமுகவில் இணைந்த உள்ளனர். இதனால், திமுக பக்கம் ஓபிஎஸ் சாய்வாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது. எது எப்படியோ? தமிழக அரசியல் வரலாற்றில் ஓபிஎஸ்சுக்கு இனி ஏறுமுகமா? என்பது அவர் எடுக்கும் முடிவில் தான் உள்ளது.

Tags : OPS ,Chief Minister ,Edappadi Palaniswami ,AIADMK ,DMK ,Thaweka ,
× RELATED எம்எல்ஏவானது அதிமுகவுல… பெயர்...