- சிம்ஸ் மருத்துவமனை
- செஷல்ஸ்
- தாம்பரம்
- ஜனாதிபதி
- குடியரசு
- சீஷெல்ஸின்
- டாக்டர்
- பேட்ரிக் ஹெர்மினி
- ரவி பச்சமுத்து
- இந்தியா
தாம்பரம்: செஷல்ஸ் குடியரசின் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி, சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்துவை அவரது இந்திய வருகையின்போது சந்தித்துப் பேசினார். செஷல்ஸ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும், நீண்டகால அடிப்படையில் சுகாதாரத் தீர்வுகளை வழங்கவும் மற்றும் மருத்துவமனை கட்டமைப்பை உருவாக்கவும் இந்நிகழ்வின்போது விவாதிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, சிம்ஸ் மருத்துவமனையின் நிபுணர்கள் குழு அடுத்த வாரம் செஷல்ஸ் மற்றும் மொரிஷியஸ் நாடுகளுக்குச் செல்லவுள்ளது. அங்கு தற்போதுள்ள சுகாதார பராமரிப்பு வசதிகளையும், உட்கட்டமைப்புகளையும் ஆய்வுசெய்து, அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து அவற்றை மேம்படுத்துவதற்கான அடுத்தகட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ளும். மேலும், செஷல்ஸ் மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில், சிறப்பு துறைகளுக்கான மருத்துவ முகாம்களை நடத்தவும் சிம்ஸ் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க பிராந்தியத்தில் சுகாதாரத் துறையில் செஷல்ஸ் நாட்டை நிலைநிறுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நோயாளிகளின் தரவு மேலாண்மை, மேலதிக சிகிச்சைக்கான பரிந்துரைகள், மருத்துவ ரீதியில் சிகிச்சைக்கான முடிவெடுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்காக, செஷல்ஸ் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளை இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த, நிகழ்நேர தேசிய டிஜிட்டல் சுகாதார வலையமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த கலந்துரையாடலில் இடம்பெற்றன.
கூடுதலாக, எஸ்ஆர்எம்-ன் வெற்றிகரமான கல்வி முறையைப் பயன்படுத்தி, தகுதி வாய்ந்த செவிலியர்களைப் பணியமர்த்துவதில் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. செஷல்ஸ் நாட்டின் சுகாதாரப் பணியாளர்களுக்கு திறன் பரிமாற்றம் மற்றும் நீண்டகால செயல்திறன் உருவாக்கத்திற்கும் எஸ்ஆர்எம்-ன் திறனும், அனுபவமும் உதவும்.
தற்போதுள்ள டயாலிசிஸ் பிரிவைச் செயற்கைக்கோள் ஆதரவு சேவைகளுடன் வலுப்படுத்துவதன் மூலம் டயாலிசிஸ் சேவைகளை விரிவுபடுத்துவது, 24 மணி நேர நிபுணர் உதவியை உறுதி செய்வது மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு எளிதாகவும், தொடர்ச்சியாகவும் சிகிச்சையை வழங்குவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
