- எம். என். ராஜம்
- முத்துராமன்
- கலைஞர் நினைவு கலைத் தி
- மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- எஸ். பி முத்துராமன்
- கே. ஸ்டாலின்
சென்னை: பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குனர் எஸ்.பி முத்துராமனுக்கு 2024, 2025ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என்.ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கி, 1949ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர், 1950 மற்றும் 1960களில் முன்னணி நாயகியாக விளங்கினார்.
ரத்தக் கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், மங்கையர் திலகம் போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார். இத்தகைய பெருமைக்குரிய பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் 2024ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.பி.முத்துராமன் பிரபலமாக எஸ்.பி.எம். என்று அழைக்கப்படுபவர், தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவராவார். 1935 ஏப்ரல் 7ம் தேதி காரைக்குடியில் பிறந்த இவர், 1960ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக தொடங்கி, பின்னர் 1970 முதல் 1990கள் வரை தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான வணிக இயக்குநராக உயர்ந்தார். 70க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார்.
இவரது சிறந்த படங்களில் ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி (1977), ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1978), முரட்டுக்காளை, எங்கேயோ கேட்ட குரல் (1982), சகலகலா வல்லவன் (1985) போன்றவை முக்கியமானவை. கலைத்துறையில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சிறந்த பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, இவர் 2025ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் ஆகிய இருவருக்கும் முதல்வர் ரொக்கப் பரிசாக தலா ரூ.10 லட்சம், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என தமிழ அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
