×

சைபர் க்ரைம், போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 70 காவல் அதிகாரிகள்: போலீஸ் கமிஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு

சென்னை: சென்னையில் சிறப்பாக பணிபுரிந்த 70 காவல் அதிகாரிகள், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி, பாராட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், காயார் கிராமத்தில் ஆசிப் இக்பால் என்பவருக்கு சொந்தமான சுமார் ரூ.52 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த சுபாஷ் சந்த் ஜெயின் உள்பட நால்வரை, சீட்டு மற்றும் கந்து வட்டி புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து, ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

* போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து சொத்துளை அபகரித்து வங்கிகளில் பணம் பெற்று மோசடி செய்து சுமார் 13 குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான கொடுங்கையூர் கமலகண்ணன் (45) என்பவரை, மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி புலனாய்வு பிரிவு-2 போலீசார் பெங்களூரு சென்று கைது செய்தனர்.

* மடிப்பாக்கம் பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை, மத்திய குற்றப்பிரிவு போலி ஆவணங்கள் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து ரப்பர் ஸ்டாம்புகள், போலி ஆவணங்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

* சைதாப்பேட்டையை சேர்ந்த முகமது யாசின் என்பவருக்கு ஷாகீன் என்பவருடன் திருமணம் நடைபெற்ற 5 நாட்களில் குடும்ப பிரச்னை காரணமாக முகமது யாசின் சகோதரியின் தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஷாகீன் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, மேற்படி வழக்கில் சைதாப்பேட்டை காவல்நிலைய போலீசார் துரிதமாக செயல்பட்டு திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் வழக்கில் மனுதாரர், காவல் துறையினர் மனித நேயம் மற்றும் நேர்மையான முறையில் விசாரித்து மன நிறைவாக இருந்ததாக காவல் ஆணையர் மக்கள் குறை தீர்ப்பு நாளில் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

* போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி சிஎம்பிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 27 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த குற்றவாளியை கைது செய்தனர். நுண்ணிறிவுப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் முன்கூட்டியே நுண்ணறிவு தகவல்கள் சேகரித்து சிறப்பாக பணபுரிந்துள்ளனர்.

* கடந்த 12ம் தேதி வானகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து சுமார் ரூ.13 லட்சம், 12 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வானகரம் காவல் நிலைய காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை செய்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற வீட்டில் இருந்த இரண்டு கைரேகைகள் முரளி என்கிற குஷ்மி என்ற பழைய குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்துப்போனதால், குற்றவாளி பயன்படுத்தும் செல்போன் டவர் லொகேஷன் மற்றும் சிசிடிவி பதிவுகளை கொண்டு பாண்டிச்சேரியில் வைத்து 3 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் பணம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப்பொருட்கள், 3 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

* நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெஎஸ்எம் பேரக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற வெளிநாட்டு பண பரிமாற்ற அலுவலகத்தின் ஷட்டரை உடைத்து ரூ.25000 பணத்தை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திருடி சென்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை விசாரணை செய்ததில் குற்றவாளிகள் அவரது ஆட்டோவில் சவாரி வந்ததாகவும் அதற்குரிய பணத்தை கூகுள்பே மூலம் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

அதன்பேரில் குற்றவாளிகள் பயன்படுத்திய கூகுள்பே எண்ணின் செல்போன் டவர் லொகேஷன் மூலமாக குற்றவாளிகள் ரயில் மூலமாக குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவர உடனடியாக தெற்கு கூடுதல் காவல் ஆணையர் மூலம் குஜராத் மாநில சூரத் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சூரத் பகுதியில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்த நான்கு குற்றவாளிகளையும் நந்தம்பாக்கம் போலீசார் கைது செய்து குற்றவாளிகளிடம் இருந்து ரூ.23 ஆயிரம் மற்றும் 3 செல்போன்கள் மீட்கப்பட்டது.

* சென்னை காவலில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்கள் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வினை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்து சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

* கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அன்று டிபிஐ வளாகத்தின் வெளியே இடை நிலை ஆசிரியர் சங்கம் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் மயக்கமடைந்ததை தொடர்ந்து, அங்கு பணியிலிருந்த திருவல்லிக்கேணி போக்குவரத்து தலைமைக்காவலர் அனிதா துரிதமாக செயல்பட்டு முதலுதவி செய்து காப்பாற்றி அப்பெண்மணியை மேல் சிசிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

* கடந்த 14ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அஜய்குமார் என்பவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற 2 பேரில் ஒருவரை அங்கு பணியிலிருந்து வளசரவாக்கம் காவல் நிலைய போக்குவரத்து காவலர் சந்திரசேகர் மடக்கிப்பிடித்து செல்போனை பறிமுதல் செய்து குற்றவாளியை சிஎம்பிடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

* கடந்த 2ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச்சேர்ந்த ரேவதி என்ற பெண் “29 ஏ” எம்டிசி பேருந்தில் பயணம் செய்த போது, தாசபிரகாஷ் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சரண் என்பவர் பெண்ணிடம் தங்க தாலி செயினை பறித்து கொண்டு தப்பிய போது, அருகே பணியில் இருந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் ரியாஷ் முகமது, முதல் நிலை காவலர் மாதவன், காவலர் பாலமுருகன் ஆகியோர் சரணை விரட்டி மடக்கிப்பிடித்து அவரிடமிருந்து தங்க தாலி செயினையும் பறிமுதல் செய்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

* கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற 2வது அகில இந்திய காவல்-2025ம் ஆண்டு பளுதூக்கும் போட்டிகளில் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கலந்து கொண்ட வியாசர்பாடி காவல் நிலைய காவலர் கார்த்திக் தங்கப்பதக்கமும், அயனாவரம் காவல் நிலைய காவலர் அர்ஜூன் வெள்ளிப்பதக்கமும், உயர் நீதிமன்ற காவல் நிலைய பெண் காவலர் மஞ்சு, வெண்கலப்பதக்கமும், வியாசர்பாடி காவல் நிலைய போக்குவரத்து காவலர் வசந்த் 4 வது இடம் பெற்றும், ஓட்டு மொத்தமாக 2ம் இடம் பெற்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேற்படி காவலர்கள் வெற்றி பெற சென்னை பெருநகர காவல் துறை பளுதூக்கும் அணியின் பொறுப்பாளர்கள் மத்திய குற்றப்பிரிவு தலைமைக்காவலர் செல்வம், போக்குவரத்து திட்டமிடல் பிரிவு தலைமைக்காவலர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர். மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்த காவல் அதிகாரிகள், காவலர்கள், காவலர் எழுத்து தேர்வினை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த அமைச்சுப்பணியாளர்கள்,

காவலர்கள் மற்றும் பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற காவலர்கள் என மொத்தம் 70 காவல் அலுவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.  இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் வடக்கு பர்வேஷ்குமார், இணை ஆணையர்கள் மனோகர், (வடக்கு மண்டலம்), பண்டி கங்காதர், (கிழக்கு மண்டலம்), கல்யாண், (தெற்கு மண்டலம்) உமா, (மேற்கு மண்டலம்) மகேஷ்வரன், (தலைமையிடம்), துணை ஆணையர்கள் சுப்புலட்சுமி, (நிர்வாகம்) மற்றும் குமார் (கொளத்தூர் காவல் மாவட்டம்) ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Police Commissioner ,Arun ,Chennai ,Kayar village ,Chengalpattu district ,Asif Iqbal… ,
× RELATED இனி வரும் காலங்களில் விளையாட்டு...