சாலை மறியல் போராட்டம் அரசு ஊழியர்கள் 400 பேர் கைது

திண்டுக்கல், பிப்.3:பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 21 மாதகால பணப்பலன்கள்  நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், அகவிலைப்படி பறிக்கப்பட்ட சரண்டர் உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும் என்பன உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக திண்டுக்கல்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக கிளம்பி  பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக்  அலி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் சுகந்தி, ஜாக்டோ ஜியோ  மாநில நிதி காப்பாளர் மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பெண்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர்  கைது செய்தனர். திண்டுக்கல் ஒய்எம்ஆர் பட்டி ரோட்டில் உள்ள மகாலில் அடைக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பின்பு மீண்டும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

Related Stories: