சென்னை : சென்னை அடையாறில் காகங்கள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் காரணம் என தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு சுற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் திடீரென உயிரிழந்த நிலையில், அது குறித்து சோதனை நடத்தப்பட்டது. காகங்கள் இறப்புக்கான காரணத்தை அறிய போபாலில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் சோதனை நடந்தது. இந்த நிலையில் தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், “காகங்களின் மாதிரிகளை பரிசோதித்ததில் எச்5.என்1: ஏலியன் எனப்படும் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இறந்த பறவைகளை ஆழமாக தோண்டி புதைக்கவும், பண்ணைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்துகிறோம். பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
