தேர்தல் விதிமுறையால் போச்சம்பள்ளி சந்தையில் புளி வியாபாரம் சரிவு

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண் வளம் புளி சாகுபடிக்கு கை கொடுத்து வருகிறது. இப்பகுதியில் விளையும் புளி அதிக சதைப்பற்றுடன் இருப்பதால், சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை விளையும் புளியை உலுக்கி எடுத்து கொட்டை, ஓடுகள் மற்றும் நார் நீக்கி சுத்தம் செய்து பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். நடப்பாண்டு புளி விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதனால் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று கூடிய போச்சம்பள்ளி வார சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று புளி வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இருப்பினும் தேர்தல் பறக்கும் படை சோதனை அச்சத்தால், வெளிமாவட்ட வியாபாரிகள் சந்தைக்கு வரததால், புளி வியாபாரம் குறைந்து விட்டது. 40 டன் புளி வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், சந்தையில் 25டன் மட்டுமே புளி வாங்கப்பட்டது. இதனால் விற்பனைக்கு வந்த புளியை விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் திரும்பி எடுத்து சென்றனர்.

இது குறித்து புளி மொத்த வியாபாரி வலசை வெங்கட்டராமன் கூறுகையில், `தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வெளி மாவட்ட வியாபாரிகள் வரவில்லை. விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் தங்கள் புளியை விற்பனைக்கு அதிகளவில் லாரி மற்றும் டெம்போ, டூவீலர்கள் மூலம் எடுத்து வந்தனர். ஆனால், வியாபாரிகள் வரததால் விற்பனை மந்தமாக இருந்தது.

பணம் பரிவர்த்தனையால் புளி வாங்க வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் முன் வரததால், சுமார் 25 டன் புளி மட்டுமே விற்கப்பட்டது. இதனால் விற்பனைக்கு கொண்டு வந்த புளியை விவசாயிகள் மற்றும் சிறுவியாபாரிகள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு எடுத்து சென்றனர்,’ என்றார்.

Related Stories: