டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது ஏற்படும் பயங்கர சத்தம்..குழந்தைகள்,நோயாளிகள், கர்ப்பிணிகள் பீதி : ஜவாஹிருல்லா வேண்டுகோள்

சென்னை : டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது ஏற்படும் பயங்கர சத்தத்தால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி வடிநில மாவட்டங்களில் சில வாரங்களாகக் காலை வேளையில் சக்தி வாய்ந்த வெடிபொருள் வெடிப்பது போன்று பயங்கரச் சப்தம் உணரப்படுவதாகவும் இதன் காரணமாகப் பொதுமக்கள்,குழந்தைகள்,நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பீதியடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்பு கும்பகோணம்,பாபநாசம்,திருவிடைமருதூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்ட இந்த சப்தம் கடந்த சில நாள்களாக மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம்,காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தினமும் கேட்டு வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதைக் காணமுடிகிறது.

தஞ்சை விமானப்படையில் உள்ள ஜெட் ரக விமானங்கள் பறக்கும் போது ஏற்படும் ஏர்ரிலீஸ் காரணமாக இந்தச் சத்தம் ஏற்படுவதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறப்பட்டாலும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நில அதிர்வு சோதனை காரணமாக இந்தச் சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று இது தொடர்பாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கும் ஐயப்பாடுகளைப் புறந்தள்ள இயலாது.

எனவே இந்தப் பயங்கரச் சத்தத்திற்கான காரணத்தைத் தமிழ்நாடு அரசு மக்களுக்கு விளக்குவதுடன் இது இனிமேலும் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் அச்சத்தைப் போக்கிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: