- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 38வது கேரள மாநில அறிவியல் மாநாடு
- சென்னை
- தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில்
- செயின்ட்
- ஆல்பர்ட் கல்லூரி
- எர்ணகுளம்...
சென்னை: கேரள 38வது மாநில அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் முதல் பரிசு வென்றுள்ளது. 38வது கேரள மாநில அறிவியல் மாநாடு ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை, எர்ணாகுளம் செயின்ட் ஆல்பர்ட்ஸ் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த உயர்மட்ட வல்லுநர் குழு விவாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கலந்துகொண்டு தங்கள் மாநிலத்தின் அறிவியல் புதுமைகளை பற்றி எடுத்துரைத்தனர்.
தமிழகம் சார்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் பங்கேற்று, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை துறைகளில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னோடி முயற்சிகள், சாதனைகள் மற்றும் அடைந்துள்ள முக்கிய மைல்கற்கள் குறித்து விளக்கினார். மேலும், மன்றத்தின் திட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுடன் செயல்படுத்த ஏதுவான கூட்டு முயற்சித் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
மாநாட்டின் ஒரு பகுதியாக கேரள மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் மூலம் நடத்தப்பட்ட தேசிய அறிவியல் கண்காட்சியில், “மற்ற மாநில மன்றங்கள்” பிரிவின் கீழ் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் முதல் பரிசை பெற்றுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்த விருது, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர் மற்றும் அடித்தள புதுமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பயனளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மற்றும் தாக்கமிக்க பல்துறைத் திட்டங்களை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் மன்றத்தின் திட்டங்கள் மற்றும் புவிசார் குறியீடு (ஜிஐ) பெற்ற தயாரிப்புகள், கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் சமூகங்களால் தயாரிக்கப்பட்ட ஆபரணங்கள், அட்டவணைச் சாதி, அட்டவணை பழங்குடியினர் பிரிவின் செயல்பாடுகள், மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்கள், மேலும் காப்புரிமை தகவல் மையம் (பிஐசி), அறிவுசார் சொத்து வசதி மையம் (ஐபிஎப்சி) மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற வசதி மையம் (டிடிஎப்சி) ஆகியவற்றின் சேவைகள் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த தேசிய அளவிலான அங்கீகாரம், தமிழ்நாடு முழுவதும் அறிவியல், தொழில்நுட்பம், புதுமை, சமூக உள்ளடக்கம் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சியை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதோடு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைச் சூழலில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
