×

சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு கூடுதல் விமானங்கள்: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வரையில், சென்னை – மதுரை இடையே, தினமும் 8 விமானங்கள், மதுரை- சென்னை இடையே தினமும் 8 விமானங்கள் என நாளொன்றுக்கு சென்னை- மதுரை- சென்னை இடையே, 16 விமான சேவைகளை இயக்கியது.

ஆனால், அந்த விமானங்கள் அனைத்தும் 82 பயணிகள் பயணிக்க கூடிய ஏடிஆர் எனும் சிறிய ரக விமானங்கள்.  கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி முதல், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னை- மதுரை- சென்னை இடையே, இயக்கப்படும் விமான சேவைகளில் மாற்றங்கள் செய்து, ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்களுக்கு பதிலாக, 184 பயணிகள் பயணிக்க கூடிய, ஏர்பஸ் எனும் பெரிய ரக விமானங்கள் இயக்கத் தொடங்கியது.

ஆனால் தினமும் இயக்கப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்தது. தினமும் சென்னை- மதுரை இடையே, 3 விமானங்களும், மதுரை- சென்னை இடையே 3 விமானங்களும் என மொத்தம் 6 விமான சேவைகளாக குறைக்கப்பட்டது. இதனால் பயணிகள் பாதிப்படைந்தனர். இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னை- மதுரை- சென்னை இடையே, ஏர் பஸ் பெரிய விமானங்களுக்கு பதிலாக, மீண்டும் ஏடிஆர் ரக சிறிய ரக விமானங்களை இயக்க தொடங்கியுள்ளது.

சென்னை- மதுரை இடையே தினமும் 8 விமான சேவைகளும், மதுரை- சென்னை இடையே, 8 விமான சேவைகளும், நாள் ஒன்றுக்கு 16 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. அதன்படி காலை 6.10 மணி, 8.15 மணி, 10.20 மணி, பகல் 12.15 மணி, பிற்பகல் 2.40 மணி, மாலை 4.15 மணி, 6.05 மணி, இரவு 8.05 மணி ஆகிய நேரங்களில், இந்த 8 விமானங்கள், சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கின்றன.

அதைப்போல் இந்த 8 விமானங்களும், மதுரையிலிருந்து சென்னைக்கு இரவு 11.30 மணி வரையில், திரும்பி வருகின்றன. இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் தவிர, ஏர் இந்தியா விமான நிறுவனம், தினமும் சென்னை- மதுரை- சென்னை இடையே, 2 விமானங்களை இயக்குவதால், சென்னை- மதுரை- சென்னை இடையே, தினமும் 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், தினமும் பகல் 1.35 மணிக்கு, சென்னை-திருச்சி இடையே ஏடிஆர் ரக சிறிய விமானம் கூடுதலாக இயக்குகிறது. அதே ஏடிஆர் ரக விமானம், திருச்சியில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. விமானங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Chennai ,Madurai ,Trichy ,Chennai airport ,IndiGo Airlines ,Madurai… ,
× RELATED அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக...