சென்னை: ஒன்றிய பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான இளநிலை க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாடு முழுவதும் உள்ள ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி 2026-27 கல்வியாண்டு இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 11 முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜனவரி 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (பிப்ரவரி 4) நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தை பிப்ரவரி 7ம் தேதி வரை செலுத்தலாம். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பிப்ரவரி 9 முதல் 11ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
